Friday, February 16, 2007

299. என் அம்முவும் குட்டி ராட்சசியும்

ரொம்ப நாளா எழுதணமுன்னு நெனச்சு, இப்பத் தான் எழுத முடிஞ்சது. ஏதோ, சின்னச் சின்ன விஷயங்களையும் பதிந்து வைக்க வேண்டும் என்று தோன்றியதன் விளைவே, சற்றே நீண்ட இப்பதிவு !

மூத்தவள் அம்மு (அதாங்க, என்னோட உரல் balaji_ammu.blogspot.com-ல இருக்கற பேரு) ரொம்ப சாத்வீகம், இயற்கையாகவே சாது (நம்ம வளர்ப்பு அப்படின்னு சொல்ல வரலீங்க!), சொன்னதைப் புரிந்து செயல்படுபவள் (உங்களை மாதிரி இல்லன்னு நீங்க சொல்ல வருவதும் புரியாமல் இல்லை:)) பிடிவாதம் என்பது மருந்துக்குக் கூட கிடையாது. பொறுமைசாலி. மென்மையான குணம். (மரபணு அறிவியலுக்கு அப்பாற்பட்டு சமயத்துலே இப்படி நடக்கறது உண்டுங்க!) இரண்டு வயதிலேயே ஸ்பஷ்டமான பேச்சு, மூன்றரை வயதில் அமலானாதி பிரான் (பிரபந்தம்) பாசுரங்களை மனப்பாடமாகச் சொல்வாள் ! அவளது நாலு வயதிலிருந்து, பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வாங்கியுள்ளாள்.

இருவருமே (நான், மனைவி) வேலைக்குச் சென்றதால், பத்து மாதத்திலிருந்து, 6 வயது வரை, எங்கள் குடும்பத்திற்கு வேண்டிய பெண்மணி வீட்டில் விட வேண்டிய சூழல் ! முதலில் கொஞ்சம் கில்டியாகத் தான் இருந்தது. இது வேலைக்குப் போகும் எல்லா பெற்றோர்களுக்கும் பொருந்தும் தானே ! அம்முவோ, அந்த வீட்டிலும் அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு, அவர்களின் அன்புக்கு பாத்திரமாகி விட்டாள். சின்னவளுக்கு அதிர்ஷ்டம் ஜாஸ்தி. வீட்டிலேயே ஒரு ஆளை வைத்து, அவளை பார்த்துக் கொள்ள முடிகிறது.


முதல் வகுப்பு படிக்கும்போது, ஒரு முறை, அம்மு சரோஜினி நாயுடுவாக வேடமிட்டு, நான் எழுதிக் கொடுத்ததை அருமையாகப் பேசி பரிசு வாங்கினாள். அவள் பேசியதை கணினியில் சேமித்து வைத்திருந்தேன். போறாத வேளை, அந்த ஹார்ட் டிஸ்க் மண்டையைப் போட்டு விட்டது :( படிப்பிலும் சுட்டி, அதனால் ஆசிரியைகளுக்கு பிடித்த மாணவியாக இன்று வரை (இப்போது வயது 10) திகழ்கிறாள். அதிர்ந்து பேசி அறியாதபோதும், அவள் தான் கடந்த இரண்டு வருடங்களாக வகுப்புத் தலைவி என்ற செய்தி கேட்டு சற்று ஆச்சரியம் ஏற்பட்டது !

மூத்தவள் பிறந்து, அதற்கடுத்த 5 வருடங்கள் என் வாழ்வின் வசந்தகாலம் என்று கூறுமளவுக்கு ஓர் அருமையான காலகட்டம் ! அப்போது வருடத்திற்கு மூன்று தடவை, ஏதாவது ஊருக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. மைசூர், பெங்களூர், மதுரை, கோவை, தஞ்சாவூர், விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், முன்னார், கோடை என்று பல ஊர்களுக்குச் சென்றிருக்கிறோம். மிகவும் சந்தோஷமான நாட்கள் ! அதன் பின் ஐந்தாறு ஆண்டுகளே ஆகியிருப்பினும், என்னவோ ரொம்ப நாள் ஆன மாதிரி ஓர் உணர்வு !


சின்னவளை (மானு) அதே பள்ளியில் சேர்க்கச் சென்றபோது, மூத்தவளுக்கு LKG எடுத்த ஆசிரியை தன் வகுப்பிலேயே சின்னவளை சேர்த்துக் கொள்ள விரும்பி, அவ்வாறே நடந்தது. ஒரு இரண்டு மாதங்கள் கழித்து அவரைச் சந்தித்தேன். அவர், "மூத்தவள் போல இவளும் இருப்பாள் என்று நம்பி, இவளை என் வகுப்பில் சேர்த்துக் கொண்டதற்கு என்னை படாத பாடு படுத்துகிறாள்" என்றி சிரித்துக் கொண்டே கூறினார். அன்று ஆரம்பித்த புகார் இன்றும் தொடர்கிறது :)

ஒரு சமயம் காணாமல் போயிருக்க வேண்டியவள், இப்போது நினைத்தாலும் பகீர் என்கிறது ! வீட்டுக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு பள்ளியில் மானுவை Pre-KGயில் சேர்த்திருந்தோம். மதியம், ஓர் ஆயா கூட்டி வருவதாக ஏற்பாடு. ஆயா வராவிட்டால், எனக்கோஎன் மனைவிக்கோ உடனே ·போன் செய்யுமாறும், யாரையாவது அனுப்பி குழந்தையை கூட்டிக் கொள்கிறோம் என்றும் தெளிவாக ஆசிரியையிடம் கூறியிருந்தேன். எப்போதும் எங்களிடம் முன்கூட்டியே தன் லீவு பற்றி செய்தி தரும் ஆயா, சொல்லாமல் கொள்ளாமல், ஒரு நாள் மானுவைக் கூட்டி வர பள்ளிக்குச் செல்லாதது, எங்கள் கெட்ட நேரம் தான் !

அந்த ஆசிரியை எங்களுக்கு ·போன் செய்யாமல், சிறிது நேரம் பார்த்து விட்டு, மானுவை விட 2 வருடங்கள் வயதில் பெரிய ஒரு சிறுவனிடம், சரியான வீட்டு முகவரியையும் தராமல், "மெயின் ரோட்டை க்ராஸ் பண்ணி, அப்படியே கொஞ்ச தூரம் போனால், ஒரு புது அடுக்கு மாடி குடியிருப்பு இருக்கும். அங்கே, விசாரிச்சு விட்டுடு" என்று கொஞ்சம் கூட பயமோ, பொறுப்போ இல்லாமல் அச்சிறுவனுடன் மானுவை அனுப்பி விட்டார். அவர் குறிப்பிட்ட திசையில் எங்கள் வீடு இல்லை என்பது தான் பிரச்சினையே !

இன்னும் குழந்தையைக் காணவில்லையே என்று என் தாயார் (அவருக்கு நடப்பதில் பிரச்சினை என்பதால் தான் ஆயா ஏற்பாடு) கவலையுடன், ஓட்டமும் நடையுமாக பள்ளிக்கு அருகே சென்றபோது, சற்று தொலைவில் மெயின் ரோடு நோக்கி சென்று கொண்டிருந்த குழந்தை மானு தான் என்று சீருடையை வைத்து அடையாளம் கண்டு கொண்டார். பதைபதைத்துப் போய், அவ்வழி சென்று கொண்டிருந்த ஒரு சைக்கிள்காரரின் உதவியுடன், மானுவை பிடித்து விட்டார். இருந்த படபடப்பில், பள்ளிக்குச் சென்று, ஆசிரியையை லெ·ப்ட் ரைட் வாங்கி விட்டார் ! ஆசிரியையும் தன் தவறை உணர்ந்து விட்டதால், அத்தோடு பிரச்சினை முடிந்தது.

கடவுள் அருளால் மானு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தாள். வாழ்க்கையில் இதுவும் ஒரு பாடம் ! அன்றிலிருந்து குழந்தைகள் விஷயத்தில் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம். என்னால் முடிந்தது, ஆயாவுக்கு ஒரு backup ஆளை ஏற்பாடு செய்து விட்டேன் :)

அம்முவும் சரி மானுவும் சரி, Pre-KG சென்ற முதல் நாட்களிலோ, LKG-க்காக பெரிய பள்ளி சென்ற முதல் நாட்களிலோ, துளியும் அழாமல் உற்சாகமாகச் சென்றதால், எங்களுக்கு எந்தவித மன உளைச்சலும் இல்லாமல் போனது ! என் இரண்டாவது மகளின் மழலை வாய்த் துடுக்கை சொல்லி மாளாது :)

1. ஒரு சமயம், என் மனைவியின் நகம் பட்டு என் கண்ணில் அடிபட்டபோது (அது குறித்து நான் எழுதிய பதிவு இங்கே!) அதற்கடுத்து ஒரு மூன்று மாதங்கள், வீட்டிலுள்ள அனைவரின் நகங்களையும் மானு அடிக்கடி பார்வையிட்டு, அவற்றை வெட்டி விடுமாறு அறிவுரை தந்த வண்ணம் இருந்தது நல்ல காமெடி :) வீட்டிற்கு வரும் விருந்தினர்களையும் விட்டு வைக்கவில்லை என்பது விசேஷம் !

2. இன்னொரு அறிவுரை, நான் பைக்கில் ஏறிச் செல்லும்போதெல்லாம், என் அம்மா சொல்கிறார்களோ, இல்லையோ, மானு மறக்காமல், 'பத்திரமாக போய்ட்டு வாங்க, ஓவர்டேக் எல்லாம் பண்ணாதீங்க' என்று கூறுவது தான் !

3. இவளுடன் படிக்கும் ஒரு சிறுவன் ஒரு முறை இவளை அடித்து விட்டான். இவள் ஏதாவது அவனைச் சீண்டியிருப்பாள், அதைக் கூறவே மாட்டாள். தான் அடிபட்ட விஷயத்தை மட்டும் கூறி, பெரிய மனுஷி தோரணையில், "இத டீச்சர் கிட்ட வந்து, கம்ப்ளெயிண்ட் பண்ணாதீங்க, போனப் போறது' என்று டிராமா போடுவதில் வல்லவள் :)

4. பள்ளியில் தின்பதற்கு, நாங்கள் எவ்வளவு snacks கொடுத்து அனுப்பினாலும், மற்ற குழந்தைகள் எடுத்து வருவதை கேட்டுத் (பெரும்பாலும் பிடுங்கி) தின்பது தான் மானுவுக்கு மிகவும் பிடிக்கும் ! அதனால், அவள் பள்ளிக்குச் செல்வதற்கு முன், 'யாரோட snacks-ஐயும் எடுக்க மாட்டேன்' என்று சத்தியப் பிரமாணம் வாங்கிக் கொண்டு தான் அவளை அனுப்புவது வழக்கம். இப்போது பரவாயில்லை !

5. என் மனைவி பணிக்குச் செல்லும்போது ஒரு தடவை லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு கிளம்பவே, அதைப் பார்த்த மானு, 'ஆபிஸ¤க்குத் தானே போறீங்க ? கல்லாணத்துக்கா போறீங்க ?' என்று ஓட்டவே, என் மனைவி, ஏதாவது விழாவுக்குப் போகும்போது லிப்ஸ்டிக் போடுவதைக் கூட விட்டு விட்டார் !

6. மானுவை யாராவது கண்டித்தால் அல்லது மிரட்டினால், வீட்டை விட்டு ஓடிப் போயிடுவேன் என்று பாவ்லா காட்டுவாள் ! 'ஓடிப் போகக் கூட ஒனக்கு சரியா வழி தெரியாதே' என்றால், 'கார்ல ஏறி ரொம்ப தூரம் ஓடிப் போயிடுவேன்' என்று அவள் சீரியஸாக பதில் கூறுவதை ரசித்திருக்கிறோம் !

7. தொடர்ச்சியாக சில நாட்கள், நான் அலுவலகத்திலிருந்து சரியாக ஒன்பதரை மணிக்கு வீடு சேர்வதை கவனித்த மானு, "எப்டிப்பா, செல்வி (தொலைக்காட்சித் தொடர்) வரும்போது கரெக்டா வந்துடறீங்க? ஒங்களுக்கு ராதிகான்னா ரொம்ப இஷ்டமா?" என்று ஏடாகூடமாக எதோ கேட்க, என் மனைவி கொஞ்சம் கடுப்பானது என்னவோ உண்மை தான் ;-) அஸின், நமீதா என்று கூறாமல், 'சித்தி' ராதிகாவின் ரசிகனாக என்னை என் மகள் அடையாளப்படுத்தியதில் எனக்குக் கூட வருத்தம் தான் ;-) ஆனால், என் மனவருத்தத்தை என் மனைவியிடம் கூட பகிர்ந்து கொள்ள முடியாத நிலைமை ;-)

8. மூத்தவளை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து, மானு அவளை அடிப்பது சகஜமாக நடக்கும். மூத்தவள் திருப்பி அடிக்கவே மாட்டாள். ஒரு முறை ஸ்கேலால் சற்று ஓங்கி அடித்ததை நான் பார்த்து விட்டு முறைக்கவே, மானு அம்முவை நோக்கி, "நான் தான் ஏதோ கோவத்துலே அடிக்க வரேனே, கொஞ்சம் தள்ளிக்கோயேன், அடி படாதுல்ல!" என்று சமாளித்ததைக் கேட்டவுடன், என் கோபம் போய் விட்டது.

9. எல்லாத்தையும் விட சூப்பர் மேட்டர், "டாய்லெட்டுல எனக்கு வேத்துக் கொட்டுது, அங்க ஒரு ·பேன் வேணும்பா" என்று ஒரு முறை என்னிடம் வேண்டுகோள் வைத்தாள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்:)

10. வார விடுமுறையில், நான் கணினியை ஆன் செய்தவுடன், "ஆரம்பிச்சுட்டீங்களா, ஒங்க பிளாக்கிங்க (blogging) ? இனிமே காதுல ஒண்ணும் விழாது" என்று பாட்டி மாதிரி குதர்க்கம் பேசுவாள் !

11. அம்முவைப் போல், பள்ளியில் நடக்கும் போட்டிகளில் மானு கலந்து கொள்வதில்லை என்று அடிக்கடி கூறிக் கொண்டிருப்பேன். ஒரு வழியாக, ஒரு முறை மாறுவேடப் போட்டி ஒன்றில், MS சுப்புலஷ்மியாக மேடையேறி, 'குறையொன்றுமில்லை, மறைமூர்த்தி கண்ணா' வை மழலையாகப் பாடி அசத்தி விட்டாள் ! அதைத் தொடர்ந்து, ஏதோ ஒரு குழு நடனத்திற்காக, மானுவை அவளது ஆசிரியை தேர்வு செய்து, தொடர்ந்து 3 சனிக்கிழமைகள் ரிகர்சலுக்குக் கூட்டி வருமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார். நான் பள்ளிக்குக் கூட்டிப் போய் காத்திருந்து அழைத்து வர வேண்டியிருந்தது.

மூன்றாவது வாரம், மானுவை பைக்கில் (உடன் என் மனைவியும் வந்தார்) ரிகர்சலுக்குக் கூட்டிச் செல்லும்போது, என் மனைவியிடம், "இதுல எல்லாம் சேர்க்க வேணாம், யார் அலையரது இப்படி ரிகர்சலுக்கு?" என்று ஏதோ கடுப்பில் மெல்லக் கூற, உடனே மானுவிடமிருந்து, "அம்மா, நான் ஸ்கூல்ல நடக்கற competition-ல சேந்தா (சேர்ந்தால்) தான், என்னை எல்லாரும் நல்ல பொண்ணுன்னு கூப்பிடுவா, அப்டின்னு அப்பா தானே அடிக்கடி சொல்லுவாங்க" என்ற பதில் டாண் என்று வெளிப்பட்டவுடன், நான் சற்று ஆடிப் போய் விட்டேன் ! நான் அவ்வாறு அலுத்துக் கொண்டதின் தவறை உணர்ந்து, மானுவை சமாதானப்படுத்தும் விதமாக, "சும்மா வெளையாட்டுக்குச் சொன்னேன் கண்ணு, இந்த மாதிரி எப்ப ரிகர்சல் வச்சாலும், அப்பாவே உன்னை கொண்டு விட்டு, கூட்டிண்டு வரேன், என்ன?" என்று கூறினேன். குழந்தைகளுக்குத் தான் எத்தனை உன்னிப்பாக கவனிக்கும் திறன் என்றும் எண்ணிக் கொண்டேன்.

எங்கள் வீட்டு சின்ன ராட்சசியைப் பற்றி சற்று நிறையவே சொல்லி உங்களை போரடித்து இருந்தால் மன்னிக்கவும் :) பொறுமையாக வாசித்தமைக்கு நன்றி.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 299 ***

Tuesday, February 13, 2007

298. டோ ண்டு ராகவ அய்யங்கார் பிரச்சினை

***************************
இது பற்றி எழுத வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன் ! டோ ண்டு செய்ததில் என்ன
பெரிய தவறைக் கண்டீர்கள் ??? இன்னும் சிலர் செய்த அராஜகங்களை பட்டியலிட்டால்,
அவர்களின் கதி என்ன ? இப்பிரச்சினை தொடர்பாக எழுதப்பட்டுள்ள எண்ணிலடங்காப்
பதிவுகளை வாசித்ததில், நமது கருத்துக்களையும் (சிலருக்கு ஒவ்வாததாக இருப்பினும்)
வெளிப்படையாக தெரிவிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்ற முடிவெடுத்து, இதை
எழுதுகிறேன் !
***************************
மேற்கூறியபடி எழுதி, இப்பிரச்சினை குறித்து நீட்டி முழக்குவேன் என்ற எதிர்பார்ப்புடன்
தாங்கள் வந்திருந்தால், தங்களுக்கு ஏமாற்றமே ! டோ ண்டுவின் 'முரளி மனோகர்' அவதாரம்
என்பது என்னளவில் காலணா பெறாத விஷயம், அதற்கு நேரம் செலவழிப்பதாக
எண்ணமில்லை :) 'டோ ண்டு' என்ற மந்திரச் சொல்லின் மகாத்மியம் அறியவே இப்பதிவு
;-) தாங்கள் மன உளைச்சல் அடைந்திருப்பின், மன்னிக்கவும் ! Sorry for the
disturbance, I am the "great escape" :)))

தலைமறைவாகி விட்ட
எ.அ.பாலா

பி.கு: இப்பதிவு இடுவதற்கு முன்னால், எனது பிளாக் கவுண்டர் எண்ணிக்கையை பார்த்து
வைத்திருக்கிறேன். ஒரு 8 மணி நேரம் கழித்து, எண்ணிக்கையை உங்களுடன் பகிர்ந்து
கொள்கிறேன் !

வந்தது வந்தீர்கள் !
ஸ்ரீகாந்த் ஜிச்கர்
பற்றிய என் பதிவை வாசித்து விடுங்கள் ! You will appreciate it !

*** 298 ***

Sunday, February 11, 2007

திருவல்லிக்கேணியில் திருமங்கை - PTM3

பிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க திருவல்லிகேணி
பார்த்தசாரதிப் பெருமாளை 10 பாசுரங்களில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். மகாபாரத யுத்தம் முடிந்த பிறகு, கண்ணன் இங்கு வந்ததாக நம்பிக்கை. உத்சவர் வேங்கடகிருஷ்ணனின் திருமுகத்தில், போரில் அம்பு பாய்ந்ததால் ஏற்பட்ட காயங்களின் தழும்புகளைக் காணலாம் !

இப்புண்ணியத் தலத்தில் 5 திவ்யதேசப் பெருமான்கள் எழுந்தருளியிருப்பதாகச் சொல்வது மரபு, அதாவது, தலப்பெருமாள் வேங்கடகிருஷ்ணன் திருப்பதி வேங்கட ரூபமாகவும், தனிச்சன்னதிகள் கொண்ட யோகா நரசிம்மர் அகோபில நரசிம்ம ரூபமாகவும், கோதண்ட ராமர் அயோத்தி ராமரூபமாகவும், கஜேந்திர வரதர் திருக்காஞ்சிப் பெருமாளின் ரூபமாகவும், ரங்கநாதர் ஸ்ரீரங்கத்து ரங்கமன்னாரின் ரூபமாகவும் கருதப்படுகின்றனர் !

Photobucket - Video and Image Hosting

மேற்கூறிய ஐவரில், வேங்கடகிருஷ்ணர், ஸ்ரீராமர், நரசிம்மர் மற்றும் கஜேந்திர வரதர் ஆகியோரைப் பற்றிய திருமங்கையின் திவ்யப் பாசுரங்களின் தொகுப்பு கீழே:

1068@..
விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை*
சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* (2)

நான்கடிகள் கொண்ட பாசுரத்தில் திருமங்கையார் எத்தனை தகவல்கள் தருகிறார், பாருங்கள் !

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் -
வில் விளையாட்டின் போது, தன்னை அழிக்க கம்சன் நடத்திய யாகத்தையும், கம்சனையும், மலையை ஒத்த பலம் வாய்ந்த அவனது மல்யுத்த வீரர்களையும்

வேழமும் பாகனும் வீழ* செற்றவன் தன்னை -
கம்சனினின் அரண்மனையின் வாயிலில், கண்ணனை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் என்ற பெருயானையையும் அதன் பாகனையும் வீழ்த்தி அழித்த கண்ணபிரானும்

புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் -
திரிபுர அசுரர்களை தனது புன்னகையால் வீழ்த்திய சிவபெருமான், ஒரு சமயம், கோபத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதால், (திருமகளை அவ்வோட்டில் பிட்சை அளிக்க வைத்து) சிவன் அடைந்த துயரங்களிலிருந்து விமோசனம் அளித்த (திருக்கரம்பனூர்) உத்தமனும்

வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை -
மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இருந்து, தன் திருக்கையில் சாட்டை ஏந்தி, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக களத்தில் முன் நின்று, தன் மார்பிலும் முகத்திலும் பகைவரின் அம்புகளை ஏற்று அர்ஜுனனைக் காத்த ஸ்ரீகிருஷ்ணனும்

சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* -
சிற்றன்னை கைகேயி இட்ட கட்டளைக்குப் பணிந்து, ராஜ்ஜியத்தையும், மணிமுடியையும் விருப்பத்துடன் துறந்த ஸ்ரீராமனும் ஆன ஒப்பில்லா எம்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

*********************************
1073@
அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணியிழையைச் சென்று*
எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* எம்பெருமான் அருள். என்ன*
சந்தமல் குழலாளலக்கண் நூற்றுவர்த்தம்* பெண்டிரும் எய்திநூல் இழப்ப*
இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*


அந்தகன் சிறுவன் அரசர் தம் அரசற்கு இளையவன்* அணியிழையைச் சென்று* எந்தமக்கு உரிமை செய் எனத் தரியாது* -
கண் பார்வையற்ற திருதாஷ்டரனின் மைந்தனும், துரியோதனினின் தம்பியுமான துச்சாதனன், பாஞ்சாலியிடம் சென்று, "உன் கணவரான பாண்டவர் சூதாட்டத்தில் உன்னை பணயம் வைத்துத் தோற்றதால், அடிமையான நீ எங்களுக்கு சேவகம் செய்ய வேண்டும்" என்று கூவியபடி அவளது சேலையைக் களைய முற்பட்டான்.

எம்பெருமான் அருள். என்ன* சந்தமல் குழலாளலக்கண் நூற்றுவர்த்தம்* பெண்டிரும் எய்திநூல் இழப்ப* -
அச்சமயத்தில், பாஞ்சாலி கைகள் இரண்டையும் உயர்த்தி, "கண்ணா ! என்னைக் காத்தருள்வாய்" என்று மனமுருகி வேண்டி ஸ்ரீகிருஷ்ணனிடம், கண்ணீர் மல்க, சரணடைந்தவுடன், அந்த ஆபத்பாந்தவன் தன் திருவருளால், துச்சாதனன் உருவ உருவ அவளது சேலையானது வளரும்படி செய்து, பாஞ்சாலியின் மானத்தைக் காத்தான். மகாபாரதப் போரில் கௌரவர் நூற்றுவரும் அழிந்து, அவரது மனைவியர் விதவைக் கோலம் பூண்டு, அதன் மூலம் பாஞ்சாலியின் சபதம் நிறைவேறுவதற்காக

இந்திரன் சிறுவன் தேர்முன் நின்றானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* -
மகாபாரதப் போரில் இந்திரனின் புதல்வனான அர்ஜுனனின் தேரோட்டியாக நின்று, பாண்டவர்களை வெற்றி பெற வைத்து, தர்மத்தை நிலை நாட்டிய ஒப்பில்லா கண்ண பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: பாஞ்சாலி சரணாகதியைப் பற்றிப் பேசும்போது, அவள், "கண்ணா ! சங்கசக்ர கதாபாணே, த்வாரகா நிலைய அச்சுதா, கோவிந்தா, புண்டரீகாக்ஷா, ரக்ஷமாம் சரணாகதம்" என்று அவனை வேண்டிச் சரண் புகுந்தாள் !

*******************************
1074@
பரதனும் தம்பி சத்ருக்கனனும்* இலக்குமனோடு மைதிலியும்*
இரவும் நன்பகலும் துதிசெய்ய நின்ற* இராவணாந்தகனை எம்மானை*
குரவமே கமழும் குளிர்ப்பொழிலூடு* குயிலொடு மயில்கள் நின்றால*
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே.


தம்பிமார்களான பரதனும், சத்ருகனனும், இலக்குவனும், துணைவியான சீதாபிராட்டியும் சதா சர்வ காலமும் சிந்தையில் நிறுத்தி துதி செய்ய வேண்டி, அவர்கள் உடன் நின்ற ஸ்ரீராமனை, வலிமை வாய்ந்த இராவணனை வதம் செய்த ஒப்பில்லா எம்பெருமானை,

மணம் கமழும் மலர்கள் பூத்துக் குலுங்கும் குளிர்ச் சோலைகள் நிறைந்த, குயில்கள் பாட மயில்கள் தோகை விரித்தாடுகின்ற, சூரியனின் கதிர்கள் நுழைய வழியில்லாத வகையில் மரங்கள் அடர்ந்த, அழகிய திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: நாம் காணும் அடுக்கு மாடி குடியிருப்புகள் நிறைந்த திருவல்லிக்கேணி ஆழ்வார் காலத்தில் சூரியக்கதிர்கள் புக வழியில்லா, அடர்ந்த மரங்கள் கொண்ட காடு போல இருந்திருக்கிறது ! ஆழ்வார் கொடுத்து வைத்தவர் :)))

***************************
1075@..
பள்ளியிலோதி வந்ததன் சிறுவன்* வாயில் ஓராயிர நாமம்*
ஒள்ளியவாகிப் போதஆங்கு அதனுக்கு* ஒன்றுமோர் பொறுப்பிலனாகி*
பிள்ளையைச்சீறி வெகுண்டு தூண்புடைப்பப்* பிறையெயிற்றனல் விழி பேழ்வாய்*
தெள்ளிய சிங்கமாகிய தேவைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே. (2) 2.3.8


பள்ளியில் தான் கற்ற நாராயணனின் ஓராயிரம் நாமங்களை, தன் மழலை வாயால் பிரகலாதன் ஓதிய சமயத்தில், அவனது தந்தையான ஹிரண்யன் பொறுமை இழந்தவனாக, என்ன செய்வதென்று புரியாத கடும் சீற்றத்தில் தனது மகனை கடிந்து, "எங்கிருக்கிறான் உன் நாராயணன் ? இந்தத் தூணிலா ?" என்று கேட்டபடி, அருகில் இருந்த தூணை தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான் !

அடித்த மாத்திரத்தில், பிறை வடிவான கூரிய பற்களும், தீப்பொறி ஒத்த சிவந்த கண்களும், அகண்ட வாயும் கொண்ட சிங்கத் திருமுகத்தோடு அத்தூணிலிருந்து வெளிப்பட்டு, அவ்வரக்கனை தன் கூரிய நகங்களால் கிழித்து மாய்த்த, அழகிய சிங்கப்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: நரசிங்க வடிவம் பார்க்க பயங்கரமாக இருப்பினும், சிங்கப்பெருமாள் அடியார்க்கு இனியவன், பேரருளாளன், அதனாலேயே ஆழ்வார் "தெள்ளிய" சிங்கமாகிய தேவன் என்கிறார் !

***************************
1076@
மீனமர் பொய்கைநாள் மலர் கொய்வான்* வேட்கையினோடு சென்றிழிந்த*
கானமர் வேழம் கையெடுத்தலறக்* கரா அதன் காலினைக் கதுவ*
ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து* சென்று நின்று ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* 2.3.9

பெருமாளின் மலர்ச்சேவைக்கு வேண்டி, மீன்கள் துள்ளி விளையாடும் தடாகத்திலிருந்து தினம் தாமரை மலர்களை பறித்து வந்த, காட்டில் உற்சாகமாக சுற்றித் திரியும், கஜேந்திரன் என்ற யானையின் காலை, ஒரு சமயம் முதலையொன்று கவ்வ, கஜேந்திரன் தன் தும்பிக்கையை உயர்த்தி, "ஆதிமூலமே" என்று பெருங்குரலெடுத்து அலற, விரைந்தோடி வந்த எம்பெருமான், தன் சக்ராயுதத்தை வீசி முதலையை அழித்து, யானையை துயரிலிருந்துக் காத்தான்.

அடியவர் துயர் தீர்க்கும் அப்பேர்ப்பட்ட வரதப்பெருமானை, தேன் மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகள் சூழ்ந்த, மாடங்கள் மிகு மாமயிலைக்கு அருகில் உள்ள, திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே !

குறிப்பு: 'ஆழி தொட்டானை' என்பதற்கு 'யானைக்கு பாதிப்பு இல்லா வண்ணம், முதலை மட்டும் அழியும்படியாக திருச்சக்கரத்தை வீசிய எம்பெருமான்' என்று பொருள் கொள்க !!!

பாசுரச் சிறப்பு: முக்கூர் லஷ்மி நரசிம்மாச்சாரியார், தனது உபன்யாசத்தின் போது கஜேந்திரனைக் காக்க பெருமாள் கொண்ட அவசரத்தை சுவைபடக் கூறுவார் ! 'ஆதிமூலமே' என்ற அலறலைக் கேட்ட மாத்திரத்தில், வைகுண்டத்தில் பிராட்டியுடன் அளவளாவிக் கொண்டிருந்த பெருமாள் அவசர அவசரமாகக் கிளம்ப யத்தனித்தபோது, அவரது உத்தரீயம் (மேல் துணி) பிராட்டியின் கையில் சிக்கிக் கொள்ள, பெருமாளின் எண்ணம் புரிந்த கருடன் அவரை விட வேகமாக பறந்து வந்து (பெருமாள் கருடன் மேல் ஏறி பயணம் மேற்கொள்ள வேண்டி) அவர் முன் நிற்க, சக்ராயுதமானது, பெருமாள் கருடன் மேலேறி பயணத்தைத் தொடங்கி விட்டபடியால், தானாகவே பறந்து வந்து அவரது வலது திருக்கரத்தில் சரியாக அமர்ந்து கொள்ள, பகவான் அதிவிரைவில் சென்று, கஜேந்திரனுக்கு அபயம் அளித்ததாக, முக்கூரார் அழகாக பாசுர விளக்கம் கூறுவார் !

தன்னை வேண்டி அழைத்த அடியவரைக் காக்க விரைந்த பெருமாளுக்கு, கருடனின் உதவியோ, சக்கரத்தின் தேவையோ தோன்றவே இல்லை ! அபயம் அளிப்பது ஒன்றே குறி ! அப்பேர்ப்பட்ட கருணாமூர்த்தி எம்பெருமான் ஆவான் ! கீழே விழுந்து அடிபட்டு அழும் குழந்தையை, கையில் ஏந்தி ஆசுவாசப்படுத்தி ஆறுதல் சொல்ல எப்படி ஒரு தந்தை அவசரமாக ஓடி வருவானோ, அது போலவே, எம்பெருமான் ஓடோடி வந்து, தன் அடியாரின் துயர் தீர்த்து அபயம் அளிப்பான்.

'கஜம்' என்பது யானையைக் குறிக்கும். கஜேந்திரனின் அலறலைக் கேட்ட மாத்திரத்தில், பெருமாள் விரைந்து வந்ததை, " 'க' என்றவுடன், 'ஜம்' என்று வந்து நிற்பான் எம்பெருமான் " என்று நகைச்சுவையாகக் கூறிக் கேட்டதுண்டு :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 297 ***

Saturday, February 10, 2007

Dr.ஸ்ரீகாந்த் ஜிச்கர் - ஓர் அசாதாரண அரசியல்வாதி !

ஜிச்கர், 1954-இல் மகாராட்டிர மாநிலத்தில், நாக்பூர் அருகே ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி மகனாகப் பிறந்தவர். 1980 முதல் 1992 வரை, சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். இரு முறை மாநில அமைச்சராகவும் இருந்து சிறப்பாகச் செயல்பட்டவர். 1992 முதல் 1998 வரை ராஜ்ய சபா உறுப்பினராக, பல பாராளுமன்றக் குழுக்களில் சிறப்பாக பணி புரிந்தவர்.
Photobucket - Video and Image Hosting
இவரது தனிச்சிறப்பு, மருத்துவம், சட்டம், மேலாண்மை, ஜர்னலிசம் ஆகியவற்றில் பெற்ற உயர்கல்விப் பட்டங்கள் போக, 10 துறைகளில் முதுகலைப் பட்டமும் (MA in 10 subjects), சமஸ்கிருதத்தில் டாக்டர் பட்டமும் வாங்கியவர். எல்லாவற்றிலும் மிக நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்திருப்பது மற்றொரு சிறப்பு. இத்தனை பட்டங்களையும் பெற அவருக்கு மொத்தம் 18 (1972 - 90) வருடங்களே பிடித்தது. இந்த கால கட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் 84 தேர்வுகளை எதிர் கொண்டிருக்கிறார் ! கிட்டத்தட்ட 28 தங்கப் பதக்கங்களை படிக்கும் காலத்தில் வென்றிருக்கிறார் ! மொத்தம் 20 பட்டங்களை பெற்ற இவர், இந்தியாவிலேயே அதிகம் படித்த மனிதராக அறியப்படுகிறார்.

படித்துப் பட்டம் பெற்றதோடு நிற்காமல், 1978-இல் IPS தேர்விலும், 1980-இல் IAS தேர்விலும் வெற்றி பெற்றார். ஆனால், அரசியல் மேல் இருந்த நாட்டத்தால், 1980-இல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, தனது 25-வது வயதில் (இந்தியாவிலேயே இளைய) சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.

ஸ்ரீகாந்த் ஜிக்சர் நாக்பூரில் 1993-இல் நிறுவப்பட்ட காளிதாஸ் சமஸ்கிருத பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தர் என்ற பெருமை பெற்றவரும் கூட. அதை நிறுவுவதற்கு இவர் அரும்பாடு பட்டிருக்கிறார். வருடந்தோறும், இவர் மத்திய பட்ஜெட் குறித்து ஆற்றும் உரையைக் கேட்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்வர். UNO, UNESCO போன்ற உலக நிறுவனங்களுக்குச் சென்று, இந்தியாவின் சார்பாக, பல குழுக்களுக்கு தலைமை தாங்கி அற்புதமான உரைகள் பல நிகழ்த்தியிருக்கிறார்.

புத்தகங்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர் 3 புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது தனி நூலகத்தில் 52000 அரிய நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார் ! நாக்பூர் டைம்ஸ் மற்றும் நாக்பூர் பத்திரிகா வெளியிடும் நவசமாஜ் பத்திரிகை நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.

சின்மயா யுவகேந்திராவின் முதல் தலைவராக இருந்து, நாடு முழுதும் பயணம் செய்து, பல கிளைகளை நிறுவி, சமூகத் தொண்டாற்றியிருக்கிறார். இந்துமதக் கோட்பாடுகள், தத்துவங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய தலைப்புகள் குறித்து உரையாற்றுவது இவருக்கு பிடித்தமான ஒன்று, பல உரைகள் நாடெங்கிலும் நிகழ்த்தியிருக்கிறார். குழந்தைகளையும், இளைஞர்களையும் ஊக்குவித்து, நல்வழி செலுத்துவதில் மிக்க ஈடுபாடு உடையவர்.

குரான், பைபிள், வேதங்கள் என்று மூன்றையும் பயின்று அறிஞராக அறியப்பட்டவர். ராமாயணம் மற்றும் மகாபாரதம் குறித்து, தனது 22-வது வயது முதலே, உரைகள் நிகழ்த்தி வந்துள்ளார்.பன்முகங்கள் கொண்ட ஓர் அசாதாரண மனிதர் இவர் திகழ்ந்தபோதும், மிக்க தன்னடக்கமும், அமைதியான சுபாவமும் கொண்டவர்.

ஒரு வகையான கொடிய புற்று நோயினால் 2000-இல் பீடிக்கப்பட்ட இவர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று, ஒரு வருடத்தில் பூரண குணமடைந்தார். ஆனால், விதியின் கோர விளையாட்டைப் பாருங்கள் ! ஜூன் 2004-இல், நாக்பூருக்கு அருகே உள்ள கொந்தாலி என்ற இடத்தில் இவர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கார் ஒரு பேருந்துடன் மோதி ஏற்பட்ட கொடிய விபத்தில், தனது 49-வது வயதில் காலமானார்.

ஜூனியர் விவேகானந்தர் என்று கொண்டாடத்தகும் வகையில் வாழ்ந்து மறைந்த Dr.ஸ்ரீகாந்த் ஜிச்கரின் நினைவை போற்றுவதற்காக எழுதப்பட்டது இப்பதிவு. இந்த உன்னதமான மனிதரைப் பற்றி இங்கே வாசித்து விரிவாகத்தெரிந்து கொள்ளலாம்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 296 ***

Friday, February 09, 2007

295. சொன்னதும் சொல்லாமல் விட்டதும் - 1

1 ) தி.க. தலைவர் வீரமணி

சொன்னது :
ஆனால் தி மு க அரசில் மூத்த அமைச்சராக இருக்கிற துரை முருகன் " முன்கூட்டியே எதையும் தெரிந்து கொள்கிற சக்தி படைத்தவர் பாபா .தன் சக்தியால் மோதிரம் வரவழைத்து எனக்கு தந்தார் என்பதுதான் நகைப்புக்கு இடம் தரக் கூடியது.மேஜிக் காட்சியை கடவுளின் அனுக்கிரகம் என்று சொல்வதை கலைஞரின் சர்க்காரில் அமைச்சராக இருக்கும் ஒருவரே பாராட்டுவது வேதனையாக இருக்கிறது

சொல்லாமல் விட்டது :
இதுக்கு பதிலா இவரும் பாபா காலிலேயே விழுந்திருக்கலாம்..வேட்டி தடுக்கி விழுந்துட்டாருன்னு சொல்லியாவது சமாளிச்சிருப்போம்

2 ) தமிழக அமைச்சர் துரை முருகன்

சொன்னது :
பாபா தனது சக்தியால் மோதிரம் வர வழைத்து எனக்கும் தயாநிதி மாறனுக்கும் மட்டும் தந்தார்

சொல்லாமல் விட்டது :
நல்ல வேளை...தயாநிதி மாறனுக்கும் தந்துட்டாரு..நா தனியா மாட்டியிருந்தா இதை வச்சே நம்ம அமைச்சர் பதவியை காலி பண்ணினாலும் பண்ணிருவாங்க.


3 ) முதலமைச்சர் கருணாநிதி

சொன்னது :
வானத்தை கிழித்து பொற்காசுகளை வாரி கொட்டிக் கொடுத்தாலும் கொள்கைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்.

சொல்லாமல் விட்டது :
எந்தெந்தக் கொள்கைகளை அப்படீன்னு யாரும் கேக்காத வரைக்கும் சரி.


4 ) பாக் அதிபர் முஷாரப்

சொன்னது:
காஷ்மீர் பிரச்சினைக்கு வன்முறை மூலமே தீர்வு காண முடியும் என நம்புகிரவர்களை எங்களுடன் சேர்க்க மாட்டோம்

சொல்லாமல் விட்டது :
அவங்க கையில துப்பாக்கியும், வெடிகுண்டும் குடுத்து இந்தியாவுக்குள்ள அனுப்பிருவோம்


இன்னும் இது போல நிறைய இருக்கு. Later :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 295 ***

Wednesday, February 07, 2007

294. வரம் தந்த பாபாவுக்கு பதமான லாலி !

தலைப்பு என்னுடையது. மேட்டர் கி.அ.அ. அனானியுடையது !

அனானி நண்பர் சூப்பர் ·பார்மில் இருக்கிறார் போல் உள்ளது :) இன்னும் 2 மேட்டர்களை மெயிலில் அனுப்பித் தாக்கியுள்ளார் ;) அவற்றைப் பிறகு பதிகிறேன்.

எப்போதும் போல், இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! என்சாய் !

******************
சப்பை மேட்டருக்கு இத்தனை சப்பைக்கட்டா ?

அல்லாரும் பேசி முடுச்சுட்டாங்க ..அதனால நாம ஆரம்பிக்கிறோம் அதாங்க முதல்வர் மனைவி தயாளு அம்மாள் சாய்பாபா கால்ல விழுந்த மேட்டரு.

எல்லாத்துக்கும் மொதல்ல ஒண்ணு சொல்லிப்போடணும் .....இதுல தப்பொண்ணும் இல்லீங்க...அது அவங்க இஷ்டம்

ஆனா வயசான காலத்துல ஏன் முதல்வர் இப்படி சப்பை கட்டு கட்டிக்கிட்டு இருக்காரு அப்படீன்னு ஒரு கேள்வியும் வருதுங்க

சப்பை கட்டு பார்ட்----1

அவர் நமக்கு நாமே திட்டத்தில் குடுக்குற கேள்வி பதில் அறிக்கையில் சொல்ரத கேளுங்க

" ஏன் மனைவி பக்தி மேலிட்டு காலில் விழவில்லை.வயதில் பெரியவர்கள் வந்தால் அவர்களை வணங்குவது என்ற மரியாதை காட்டும் மரபுதானே தவிர வேறில்லை "

அட்ரா சக்கைன்னானாம்...அப்பிடியே அவரோட இளவல் திராவிட தலைவர் வீரமணி சொல்லியிருக்கிறதை கேளுங்க

" தயாளு அம்மையார் பாபாவிடம் ஆசி வாங்கியதிலும் எங்களுக்கு உடன்பாடில்லை.ஏனென்றால் காலில் விழும் கலாசாரத்தை நாங்கள் ஏற்றுக் கொள்வதில்லை. "

பகுத்தறிவு விஷயமா வீரமணி சொல்றதை முதல்வர் ஏன் ஏத்துக்கணும் அல்லது கேட்கணும் அப்படீன்னு கேள்வி வர்ரது ஞாயம்தான்.

அதுக்கும் முதல்வரே "தெலுங்கு-கங்கை திட்டத்திற்காக ரூ.200 கோடி பாபா செலவழித்துள்ளார்.அதற்கு நன்றி சொல்லும் வகையில் நாங்கு முதல்வர்கள் பங்கேற்கும் விழாவில் நான் கலந்தி கொள்ளட்டுமா என்று வீரமணியிடம் கேட்டுக் கொண்டுதான் கலந்து கொண்டேன் " அப்படின்னு வீரமணியை " பகுத்தறிவு ரெபரன்ஸ் ஆப் தி வர்ல்ட்" ரேன்சுக்கு வச்சு பேசுனதுனால கேட்டோம். அம்புட்டுதான்

சப்பை கட்டு பார்ட்---2

மேலும் முதல்வர் சொன்னது

" 1948 ஆம் ஆண்டு எனக்கும் தயாளுவுக்கும் திருமணம் நடக்கும் போதே "திருமாகாளம்" கிராமத்தில் அந்தக் குடும்பத்தினர் தீவிர திராவிட கழகத்தில் இருந்தனர்.1938ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றவர்தான் தயாளுவின் பாட்டி ராஜாமணியம்மாள்"

இதுலேர்ந்து என்ன சொல்ல வர்ராரு? அவங்க குடும்பமே திராவிட பாரம்பரியம் உள்ளது..அதுனால தயாளு அம்மாளும் அந்த பாரம்பரியம்தான் அதுனால அவங்க காலில் விழுந்தது பக்தியினால் இல்லை... மரியாதை நிமித்தமே அப்படீன்னா ?

ஆனா வீரமணி அய்யா சொல்ராருங்க " இருந்தாலும் தயாளு அம்மாள் கடவுள் நம்பிக்கையாளர்" ன்னுட்டு.

அட...அவுங்க பக்தியாளரா இல்லை பகுத்தறிவாளரா அல்லது பக்தி மிகுந்த பகுத்தறிவாளரா அப்படீன்னு சட்டு புட்டுன்னு ஒரு முடிவுக்கு வாங்க.

ஏன்னா இதை வச்சு தப்பு & தப்பில்லைன்னு "ஜோ"ரா "ஜல்லியடிச்சு "விடாது" க "லக்கி"ய கூட்டத்துக்கு கொஞ்சம் தெளிவு வருமுல்ல.
*******************

*** 294 ***

அரசியல் கூத்துகள் - 2

சமீப காலத்தில் வாசித்த செய்திகளைச் சார்ந்த சில கேலிக்கூத்துகள், உங்கள் பார்வைக்கு :)

'ராமர் சேது' கூத்து:பிஜேபி மற்றும் அதிமுக, சேது சமுத்திரம் கப்பல் பாதைத் திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி வருகின்றன. 'ராமர் கேது' என்றழைக்கப்படும், இராமரின் வானர சேனை கட்டிய புராதன பாலத்தின் தடங்கள் அழிந்து விடும் அபாயம் இருப்பதாகவும், அதை அழிப்பதை நாடு தழுவிய பிரச்சினை ஆக்கப் போவதாகவும் பிஜேபி கூறி வருகின்ற நிலையில், மத்திய அமைச்சர் பாலு, இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசிய நலனுக்கு எதிரானவர்கள் என்று கூறியிருப்பது நல்ல நகைச்சுவை :)

அவர் சார்ந்திருக்கும் திராவிட இயக்கத்தின் அந்நாள் தலைமை, மகாத்மா காந்தி 1942-இல் வெள்ளையருக்கு எதிராக 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தைத் தொடங்கியபோது, அயல்நாட்டவரின் ஆட்சிக்கு ஆதரவாக தீர்மானத்தை நிறைவேற்றியது ! தேசிய நலனில் என்னே ஓர் அக்கறை !!!

'பாலாற்று அணை' கூத்து:இப்பிரச்சினையில் ஆளும் திமுகவின் 'வழவழா கொழகொழா' அணுகுமுறையினால், அக்கட்சி அதன் தோழமைக் கட்சிகளாலேயே (பாமக, இடதுசாரி, விசி) தனிமைப்படுத்தப்பட்டு விட்டது. பாமகவின் தலைவர் ஜிகே மணி அவர்கள் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், அவரு,ம் அவரது கட்சியினரும் அணை கட்டவிருக்கும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டபோது, அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கி விட்டதை ஆந்திர அரசு தரப்பே ஒப்புக் கொண்டதாகக் கூறியுள்ளார் ! ஆனால், அமைச்சர் துரைமுருகனோ சட்டமன்றத்தில், அப்படியொன்றும் இல்லை என்கிறார் !

ஆந்திராவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி ! அதனால் தான் என்னவோ, தமிழக அரசு பேச்சை விடுத்து செயலில் இறங்குவதாகத் தெரியவில்லை. மாநிலத்தில் ஆட்சியையும், மத்திய அமைச்சரவையில் பங்கையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையா ?

'மாநகராட்சி மறுதேர்தல்' கூத்து:சென்னை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடுவது குறித்து, எதிர்க்கட்சியான அதிமுகவும், மதிமுகவும் குழப்பத்தில் உள்ளன. மறுதேர்தலை அக்கட்சிகள் புறக்கணிக்கும் பட்சத்தில், கேப்டனின் தேமுதிகவுக்கு வாய்ப்புகள் ஓரளவு பிரகாசமாகும்.

மறு தேர்தலில் பெருவெற்றி கிட்டினால் மட்டுமே, சென்ற முறை தேர்தலில் பெருவாரியாக முறைகேடு செய்து ஜெயிக்கவில்லை என்பதை, திமுக பொதுமக்களுக்கு நிரூபிக்க முடியும் என்றும், இத்தேர்தலுக்கு மீண்டும் பணம் செலவழிக்க வேண்டுமே என்றும், திமுகவின் கூட்டணிக்கு இரு பெருங்கவலைகள் உள்ளன.

அதே நேரம், அதிமுக தேர்தலை புறக்கணிப்பதில் கொண்டாட்டமே ! சமீபத்தில், சென்னை உயர்நீதி மன்றம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாநில தேர்தல் ஆணையர் பதவியில் தொடர்வதை எதிர்த்து தாக்கல் செய்த ரிட் மனுவை ஏற்று, மாநில தேர்தல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாலாற்றில் புது அணை கட்டுவதற்கான அறிவிப்பை மாநகராட்சித் தேர்தலுக்குப் பின் வெளியிடுமாறு ஆந்திர அரசை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது !!!

எ.அ.பாலா

பி.கு: இன்னும் இரண்டு கூத்துகளைப் பற்றி (காவிரி ஆணையத்தின் தீர்ப்பு மற்றும் அமைச்சர் ஆற்காட்டாரின் உயர்நீதிமன்றத்தின் மீதான கடும் விமர்சனம்) நிறைய எழுதலாம் தான் ! இப்ப ரொம்ப அயற்சியாக இருப்பதால் அப்புறம் பார்க்கலாம் ! அதான் தினம், ஒரு கூத்து பற்றிய செய்தி வந்து கொண்டு தானே இருக்கிறது ;-)

*** 293 ***

Sunday, February 04, 2007

புஷ்பவனம் ஐயா - பர்ஸண்டேஜ் கதை

கொஞ்ச நாள் பிரேக் விட்டிருந்த கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி சமீபத்தில் ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி இவ்வாறு எழுதியிருந்தார்:
*********************
எ.அ.பாலா,

நலம் தானே. சமீபத்தில் நண்பர் ஒருவர் வலைப்பதிவில் கதை ஒன்றை வாசித்தேன். அட, இவர் கதை கூட எழுதுவாரா என்று ஆச்சரியம். நல்ல கருத்துள்ள கதை, நம்மளும் ஒரு கதையை எழுதலாமேன்னு ஒரு உந்துதலைத் தந்த கதை அது ;-) படிச்சுப் பார்த்துட்டு, உங்களுக்கு விருப்பமிருந்தா பதிவாப் போடுங்க.

குறிப்பிட்ட பதிவுக்குப் போய் நான் எழுதுனதை பின்னூட்டமா போடலாமுன்னா, அங்க சுத்திக்கிட்டு இருக்கற பின்னூட்ட ஜால்ராக்கள் போடற கூச்சலில், நம்ம குரல் எடுபடுமான்னு ஒரு சந்தேகம், அம்புடுதேன் :)

கி.அ.அ.அனானி

பி.கு: எந்தப் பதிவை நான் குறிப்பிடுகிறேன் என்று முதலில் கண்டுபிடிப்பவரின் சொந்தக்காரப் புள்ளைக்கு பாலா 'பேமண்ட்' சீட் ஒன்றை தள்ளுபடி ரேட்டில் வாங்கித் தருவார் ;-)
***************************
கருத்துச் சுதந்திரத்தின் மேல் எனக்கிருக்கு அசைக்க முடியாத நம்பிக்கையாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)

இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ கதை பதிவாக கீழே !

எ.அ.பாலா

**********************

"அப்பா...நான் நல்ல மார்க் எடுத்து பாஸாயிட்டம்பா...இஞ்சினீரிங் காலேசுல சீட்டு, ஸ்காலர்ஷிப்பு அல்லாம் கெடைச்சுரும்பா..நான்தாம்பா ஸ்கூல் பஸ்ட்டு " என்றபடி வந்தான் சின்ராசு

மென்று கொண்டிருந்த வெற்றிலையை இடப்பக்கம் திரும்பி புளிச்சென்று துப்பி விட்டு " சரி..அதுலென்ன..ஒனக்குதான் பாஸ் பண்ணிப் போட்டாலே சீட்டு வாங்கிருவமுல்ல " என்று வெறுமனே சொன்னார், கூடத்தில் இருந்த பெரிய தேக்கு மர ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த பஞ்சாயத்து போர்டு பிரசிடென்டு புஷ்பவனம் ஐயா.

அப்பாவிடம் சிறிதளவேனும் பாராட்டை எதிர்பார்த்து வந்த சின்ராசுவின் முகம் கருத்தது.

தலையைக் குனிந்து கொண்டே வீட்டினுள் சென்றான்

பின்னால் கணக்கு ஆவுடையா பிள்ளை " என்னங்க பள்ளிக்கூடத்திலயே சாஸ்தி மார்க் தம்பிதான் வாங்கியிருக்குதாமுல்ல " என்று சொல்வது கேட்டதும் அப்பா என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்கும் ஆவலில் சின்ராசுவின் நடை மட்டுப் பட்டது.

"மார்க் கெடக்குது களுதை...அதை வச்சுக்கிட்டு நாக்கா வளிக்க....அவனவன் 95 பர்ஸன்டு மார்க் வாங்கிட்டு இஞ்சினீரிங் சீட்டு கெடக்காம ...பேமண்டு சீட்டு வாங்க காசுமில்லாம வக்குமில்லாம பொளப்புக்காக கல்யாணம் கருமாதின்னு சடங்கு செஞ்சு வச்சு வயத்தை களுவிட்டிருக்கானுங்க...சுத்துப்பக்கத்துலே பார்க்குரீங்கல்ல...ஏன்..ஒம்ம பையன் கூடத்தான் போன வருசம் 96 பர்சண்டு மார்க்கு வாங்கி இதே ஸ்கூலுல மொதலாவதா வந்து மெடலு வாங்கினான்...இப்ப என்ன கிளிக்காங்குறேன்...மேல காலேஜு சீட்டு கெடைக்காம தீப்பட்டி ஆபிஸ¤ல 500 ரூவா சம்பளத்துக்கு கணக்குதான எளுதிக்கிட்டு இருக்கான்..டெய்லி தீப்பட்டி ஆபீஸ¤க்கு கணக்கெளுதப் போகும் போது வாங்குன மெடலை களுத்துல மாட்டிக்கிட்டு போறானா ? என்று இதழோரம் நையாண்டிப் புன்னகையுடன் கேட்டார்.

" இஞ்சினியரிங் காலேஜுல சேர இப்பத் தேவை "இந்த" பர்ஸண்டேஜும்..மெடலும் இல்ல... ..அதைப் புரிஞ்சுக்கோரும்.."என்றார் மீண்டும் புகையிலையை சாவகாசமாக வாயிலிட்டு அதக்கிய படி.

கேட்டுக் கொண்டிருந்த ஆவுடையா பிள்ளை மெளனமாய் தலையை குனிந்து கணக்கெழுதத் தொடங்கினார்.

*** 292 ***

Saturday, February 03, 2007

வைணவம் சார்ந்த எனது பதிவுகள் - A ready reckoner

ஆழ்வார்கள், திவ்யப்பிரபந்தம் மற்றும் வைணவ திவ்யதேசங்கள் பற்றி நான் இதுவரை எழுதியுள்ள பதிவுகளின் உரல்களை, அப்பதிவுகளை வாசிக்க விருப்பமுள்ள நண்பர்களின் வசதிக்காக, கீழே தொகுத்து அளித்திருக்கிறேன். இனி மேல் (அவ்வப்பொழுது) எழுதவிருக்கும், வைணவம் குறித்த, பதிவுகளின் சுட்டிகளையும் இப்பதிவில் சேர்க்கலாம் என்று உத்தேசம்.

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்கள் - 2

திருப்பாவை விளக்கப் பதிவுகளின் உரல்கள்:

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv30-ii.html

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv30.html

http://balaji_ammu.blogspot.com/2007/01/tpv29.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv28.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv27.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv26.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv25.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv24.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv23.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv16.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv6.html

http://balaji_ammu.blogspot.com/2006/12/tpv5.html

திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழிப் பாசுரங்கள் - 1

திருக்கூடலூர் திவ்யதேசம்

நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரங்கள் - 1

திருக்கண்டியூர் திவ்யதேசம்

திருப்பேர் நகர் திவ்யதேசம்

திருவன்பில் திவ்யதேசம்

திருவெள்ளறை திவ்யதேசம்

நம்மாழ்வார்

திருக்கரம்பனூர் திவ்யதேசம்

திருப்பாணாழ்வார்

திருக்கோழி திவ்யதேசம்

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - 3

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - 2

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம் - பொருளுரை

ஆழ்வார் பாசுரங்களில் பக்திரஸம்

மழைப்பாசுரங்கள்

என்றென்றும் அன்புடன்
பாலா

***291***

பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM2

Photobucket - Video and Image Hosting

உலவுதிரையும் குலவரையும்* ஊழிமுதலா எண்திக்கும்*
நிலவும்சுடரும் இருளுமாய் நின்றான்* வென்றிவிறலாழி வலவன்*
வானோர் தம்பெருமான்* மருவாவரக்கர்க்கு எஞ்ஞான்றும் சலவன்*
சலம்சூழ்ந்தழகாய* சாளக்கிராமம் அடைநெஞ்சே. 1.5.3

திருமங்கையாழ்வார் 'சகலமும் பரந்தாமனே' என்கிறார் இப்பாசுரத்தில் !

அலைகடல்களிலும், பெருமலைகளிலும், காலத்திலும், எண்திசைகளிலும், நிலவிலும், சூரியனிலும்,
இருளிலும், இவ்வாறாக எல்லாவற்றிலும் அந்தர்யாமியாக உறைந்து நிற்பவனும், பகைவரை வெற்றி கொள்ள தன் திருக்கைகளில் திருச்சக்கரத்தையும், சங்கையும் ஏந்தியவனும், வானவர்களின் தலைவனான தேவாதி தேவனும், கொடுஞ்செயல் புரியும் அசுரர்க்கு எப்போதும் எதிரியாக இருப்பவனும் ஆன பரந்தாமன் புண்ணிய நீர் சூழ்ந்த, அழகான சாளக்கிராமத்தில் எழுந்தருளி உள்ளான் ! அவ்விடம் அடைந்து அப்பரமனை பற்றிடு என் நெஞ்சமே !

****************************
சூதினைப்பெருக்கிக் களவினைத் துணிந்து* சுரிகுழல் மடந்தையர்திறத்து*
காதலேமிகுத்துக்கண்டவா* திரிந்ததொண்டனேன் நமன்தமர்செய்யும்*
வேதனைக்கு ஒடுங்கிநடுங்கினேன்* வேலைவெண்திரை அலமரக்கடைந்த நாதனே*
வந்துஉன் திருவடியடைந்தேன்* நைமிசாரணியத்துள் எந்தாய். 1.6.3

தனது கடந்த கால வாழ்க்கையை எண்ணி மிக்க துயரம் கொள்கிறார், இப்பாசுரத்தில் !

ஆகாத தந்திரங்களைக் கைகொண்டு, களவுத் தொழில் செய்து, அழகிய கூந்தல் கொண்ட பெண்டிர் பின் (சிற்றின்பம் வேண்டி) அலைந்து, பயனற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த நான், செய்த தீவினைகளின் பலனாக, நரகத்தில் யமதூதர்கள் எனக்குச் செய்யவிருக்கும் கொடிய வேதனைகளை எண்ணி ஒடுங்கி நடுங்கினேன் !

திருப்பாற்கடல் கடைந்த எம்பெருமானே, நைமிசாரண்யத்தில் எழுந்தருளியிருக்கும் என் தந்தையே, உன் திருவடிகளே காப்பு என்று உன்னைச் சரணடைந்தேனே !

************************
பள்ளியாவது பாற்கடல்அரங்கம்* இரங்கவன்பேய்முலை*
பிள்ளையாய்உயிருண்ட எந்தை* பிரானவன் பெருகுமிடம்*
வெள்ளியான் கரியான்* மணிநிறவண்ணன் என்றெண்ணி*
நாடொறும் தெள்ளியார்வணங்கும்மலை* திருவேங்கடம் அடைநெஞ்சமே. 1.8.2

இப்பாசுரத்தில் திருமங்கை மன்னனின் பக்திப் பேருவகை பிரவாகமாய் வெளிப்பட்டுள்ளது !

திருவரங்கத்திலும் திருப்பாற்கடலிலும் யோக நித்திரையில் ஆழ்ந்திருப்பவனும், ஆயர்பாடியில் சிறுபிள்ளையாக இருந்த காலத்தில், தன்னைக் கொல்ல கம்சன் அனுப்பிய பூதனை என்ற அரக்கியின் நச்சு முலையில் பால் குடித்து அவளது உயிர் குடித்தவனும் ஆன எம்பெருமான் திருவேங்கடத்தில் வியாபித்து நிற்கிறான் ! "பிரகாசமானவனே, அழகான கருமேனி கொண்டவனே, நீலமணி நிறத்துடைய அழகனே" என்று ஞானத்தெளிவு பெற்ற அடியவர், நாளெல்லாம போற்றி வணங்கும் அவ்வெம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திருவேங்கடமலை அடைந்து அவன் திருவடிகளை பற்றிடு என் நெஞ்சமே !

************************
குலந்தானெத்தனையும்* பிறந்தே இறந்தெய்த்தொழிந்தேன்*
நலந்தான்ஒன்றுமிலேன்* நல்லதோர்அறம்செய்துமிலேன்*
நிலம்தோய் நீள்முகில்சேர்* நெறியார் திருவேங்கடவா.*
அலந்தேன் வந்தடைந்தேன்* அடியேனை ஆட்கொண்டருளே. 1.9.4

இனி ஓர் பிறப்பு இல்லாவண்ணம் தன்னை ஆட்கொள்ளுமாறு பரமனை வேண்டுகிறார், இப்பாசுரத்தில் !

இப்பிறப்புக்கு முன், மனிதன், விலங்கு, பறவை என்று பலவகையான பிறப்புகள் நான் எடுத்து, வாழ்ந்து மரித்திருக்கிறேன். அப்பிறப்புகளிலெல்லாம் நல்வினைகள் ஏதும் நான் செய்ததில்லை ! பெரிய கருமேகங்கள் நிலத்தில் தவழ்ந்து ஓய்வெடுக்கும் திருவேங்கட மலையில் வாழும் பிரானே !

பல துயரங்களையும் வேதனைகளையும் அனுபவித்து, அலைந்து திரிந்து, நின்னையே கதியென்று உன் திருவடி நாடி வந்துள்ளேன், என்னை ஆட்கொண்டு அருள்வாயாக !

***********************
பற்றேல் ஒன்றுமிலேன்* பாவமேசெய்து பாவியானேன்*
மற்றேல் ஒன்றரியேன்* மாயனே. எங்கள்மாதவனே.*
கல்தேன் பாய்ந்தொழுகும்* கமலச்சுனை வேங்கடவா.,
அற்றேன் வந்தடைந்தேன்* அடியேனைஆட்கொண்டருளே. 1.9.9

பரந்தாமனை விட்டால், தனக்கு வேறு கதியில்லை என்கிறார் , இப்பாசுரத்தில் !

உன் திருவடியையைப் பற்றுவது விடுத்து எனக்கு வேறு மார்க்கமில்லை ! நான் பாவம் மேல் பாவம் பல செய்து பாவியானவன். உன்னைத் தவிர புகல் மற்றொன்று நான் அறியேன் ! உணர்வதற்கரிய மாயவனே ! திருமகளின் மணாளனான எங்கள் மாதவனே !

மலையின் உயரங்களிலிருந்து உருண்டோடி வரும் தேன் கலந்ததால் சுவை கூடிய நீர் நிரம்பிய, தாமரை பூத்த தடாகங்கள் நிறைந்த திருவேங்கடமலை வாழ் எம்பெருமானே ! உன் திருவடிகள் மட்டுமே காப்பு என்று உன்னிடம் சரணடைந்த என்னை ஏற்று எனக்கருள்வாயாக !
*******************************************

1064@
திங்களப்பு வானெரிகாலாகி* திசைமுகனார்*
தங்களப்பன் சாமியப்பன்* பாகத்திருந்த *
வண்டுண் தொங்கலப்பு நீண்முடியான்* சூழ்கழல் சூடநின்ற*
எங்களப்பன் எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே* 2.2.7

சந்திரன், பஞ்சபூதங்கள் ஆகியவற்றில் அந்தர்யாமியாகத் திகழ்பவனும், பிரம்மனின் தந்தையும், சாமவேத நாயகனும் ஆவான் எங்கள் எம்பெருமான் ! த்ரிவிக்ரமனாக, தன் திருவடிகளால் எம்பெருமான் அண்டத்தை அளந்த காலத்தில், அவனது திருவடிகளில் பிரம்மன் இட்ட நீரானது, புனித கங்கை நதியாக பெருக்கெடுக்க, சிவபெருமான் அவளை (கங்கை) தன் சடைமுடியில் ஏற்றுக் கொண்டான் ! அப்பேர்ப்பட்ட என் தந்தை, ஒப்பில்லா என் பெருமான், திருவள்ளூரில் சயன திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான் !

****************************
1065@
முனிவன் மூர்த்தி மூவராகி* வேதம் விரித்துரைத்த புனிதன்*
பூவை வண்ணன் அண்ணல்* புண்ணியன் விண்ணவர்கோன்*
தனியன் சேயன் தானொருவனாகிலும்* தன்னடியார்க்கு இனியன் *
எந்தை எம்பெருமான்* எவ்வுள் கிடந்தானே. 2.2.8

இப்பாசுரத்தில், திருமங்கை மன்னன், பக்திப் பேருவகையில், பெருமாளை எப்படி வியந்து போற்றிப் பாடியிருக்கிறார் என்று பாருங்கள் !!! இதற்கு பொருள் என்று ஒன்றை எழுதுவது தேவையில்லை என்றாலும், ஏதோ எழுதியிருக்கிறேன் !

பிரம்மனையும், சிவனையும் படைத்து மூவர் ஆனவனும், வேதத்தின் சாரத்தை பகவத்கீதையாக உபதேசித்த ஸ்ரீகிருஷ்ணனும், காயாமலர் நிறங்கொண்ட என் அண்ணலும், தர்மத்தின் நாயகனும், தேவர்களுக்கெல்லாம் தலைவனும், விளக்கத்திற்கு அப்பாற்பட்டவனும், உணர்வதற்கரிய பரம்பொருளும், ஒப்பாரில் சுவாமியும், ஆக இருந்தும், தன் அடியார்களுக்கு இனியவனும், எளியவனும் ஆன என்னப்பன், எம்பெருமான், திருவள்ளூரில் பள்ளி கொண்ட திருக்கோலத்தில் ஆட்சி புரிகிறான் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 290 ***

Sunday, January 28, 2007

289. திருக்குறுங்குடி கிராமமும் 'கைசிக' நாட்டிய நாடகமும்

இரு வாரங்களுக்கு முன் திருவல்லிக்கேணியில் உள்ள வானமாமலை மடத்தில், ஒரு நடன நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுவாக, அங்கு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதில்லை. நண்பர் ஒருவர் கூறக் கேட்டு, அதை காணச் சென்றேன்.

திருக்குறுங்குடி (இது ஒரு வைணவ திவ்ய தேசம் ஆகும்) கிராமத்திலிருந்து 40 விவசாயக் குடும்பத்துச் சிறுமியர் அடங்கிய குழு 'கைசிக நாடகம்' என்று அழைக்கப்படும் பழமையானதொரு நாட்டியக் கலை வடிவத்தை அரங்கேற்றியது. தூண்கள் நிறைந்த அந்த மடத்துக் கூடம் நாட்டிய நாடகம் நடத்த ஏற்றதாக இல்லாதிருந்தும், அச்சிறுமியர் சிரமமின்றி, மிக இயல்பாக, அற்புதமான முக பாவங்களுடனும், நேர்த்தியான நடன அசைவுகளுடனும் நடித்தது கண்டு பிரமித்துப் போய் விட்டேன் !

ஆடிய யாருக்கும், பரதம் பற்றி ஒன்றும் தெரியாது ! கடின உழைப்பும், பயிற்சியும், உள்ளிருக்கும் திறமையை வெளிக் கொணர்ந்து மிளிரச் செய்ய வல்லவை என்பதற்கு இந்த நாட்டிய நாடகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று தயங்காமல் கூறுவேன் ! திருக்குறுங்குடியை விட்டு அச்சிறார்கள் வெளி ஊர் ஒன்றுக்கு வருவது இதுவே முதன் முறை என்று அறிந்ததும் பிரமிப்பு அதிகமானது.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, 'கைசிக நாடகம்' மற்றும் திருக்குறுங்குடி கிராம வளர்ச்சி பற்றி சேகரித்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. இந்த 'கைசிக நாடகம்' திருக்குறுங்குடிக் கோயில் பெருமானான வைணவ நம்பி மேல் ஆழ்ந்த பக்தி கொண்ட, நம்படுவன் என்னும் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் வாயிலாக, பிரம்ம ராக்கதன் ஆக சபிக்கப்பட்ட பிராமணர் ஒருவர் சாப விமோசனமும், மோட்ச சித்தியும் பெறும் பழங்கதையை அடிப்படையாகக் கொண்டது. மனித நேயத்தின் மேன்மையையும், தூய்மையான பக்தியின் உன்னதத்தையும், சாதி இன வேறுபாடு வெறுக்கத்தக்கது என்பதையும் பறைசாற்றும் இந்த கைசிக நாடகமானது, 13-ஆம் நூற்றாண்டிலிருந்து, மன்னரையும், மக்களையும் ஒரு சேர வெகுவாகக் கவர்ந்து வந்துள்ளது.

2. பண்டைக்கால கோயில் சமூகங்களின் வழிபாட்டு முறையில், பாட்டும், கூத்தும் சிறப்பிடம் பெற்றிருந்ததையும் இதிலிருந்து உணரலாம். சாய்ந்த கொண்டை மற்றும் அசுரனின் உடை அலங்காரங்களில், கேரளப் பாரம்பரியத்தின் தாக்கம் இருப்பதை உணர முடிந்தது. ஒரு காலத்தில், திருவாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இந்த கிராமம் இருந்ததாகக் கேள்விப்பட்டேன். கைசிக நாடகத்தைப் பற்றி விரிவாக ஒரு பதிவு பின்னர் எழுத உத்தேசம்.

3. திருக்குறுங்குடி கோயிலில் மட்டுமே, புனித கைசிக (கார்த்திகை மாத) ஏகாதசி தினத்தன்று இரவு, பல நூறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த 5 மணி நேர நாட்டிய நாடகம், நடிப்பவரும் ஆதரிப்பாரும் இன்றி, நாடகம் பற்றிய ஓலைக்குறிப்புகள் மறைந்து போய், 50 ஆண்டுகளுக்கு முன் மெல்ல வழக்கொழிந்தது.

4. பத்து ஆண்டுகளுக்கு முன், முனைவர் ராமானுஜம் (National school of Drama), கூத்துப்பட்டறை நடிகர் முத்துசாமி மற்றும் TVS குடும்பத்தைச் சேர்ந்த நடனமணி அனிதா ரத்னம் ஆகியோரின் பெரு முயற்சியால், இக்கலைவடிவம் மீண்டும் புத்துயிர் பெற்றது. இந்த நாடகத்தில் ஒரு காலத்தில் நடித்து வந்த கிராமத்து முதியவர்களிடம் பேசி, பழைய கையெழுத்துக் குறிப்புகளைத் தேடி தூசு தட்டிப் படித்து, கோயில் சிற்ப நுணுக்கங்களை ஆய்ந்து, வைணவ அறிஞர்களுடனும், அரையர் கலைஞர்களுடன் விவாதித்து, பழைய வடிவை ஒத்த ஒரு மறு கலை வடிவத்தை இம்மூவரும் உருவாக்கினர். நமது கிராமத்துக் கோயில் பாரம்பரியத்திற்கு ஒரு மறு வடிவம் என்றும் இதைக் கொள்ளலாம் !

5. பின்னர், திருக்குறுங்குடி கிராமத்துச் சிறார்களுக்கு பயிற்சி அளித்து, அவர்களை நடிக்க வைத்து, அதன் வாயிலாக இந்த அற்புதமான 'கைசிக நாடக' கிராமியக் கலை வடிவத்தை மீட்டு மிளிரச் செய்திருக்கும் இம்மூவரும், அதைக் கற்று திறம்பட நடித்துக் கொண்டிருக்கும் கிராமத்துச் சிறார்களும் மிக்க பாராட்டுக்குரியவர்கள். பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த நாட்டிய நாடகத்தில் பங்கேற்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு !

6. திருக்குறுங்குடிக்கு அருகே உள்ள பாளையங்கோட்டையில் கிறித்துவர்கள் அதிகமாகவும், ஏர்வாடியில் இஸ்லாமியர்கள் அதிகமாகவும் வசிக்கின்றனர். இம்மக்களில் பலரும் இங்கு வந்து, இந்த நாட்டிய நாடகத்தைக் கண்டு களிப்பது மத நல்லிணக்கத்திற்கு ஓர் அருமையான சான்று ! முதலில், நடனம் கற்கவும், நாடகத்தில் நடிக்கவும் தங்கள் பிள்ளைகளை அனுப்பத் தயங்கிய திருக்குறுங்குடி கிராமத்துப் பெற்றோர், இந்த வருட நாட்டிய நாடகத்தின் முடிவில், பலரும் தங்கள் பிள்ளைகளை வெகுவாகப் பாராட்டுவதைக் கண்டு பெருமிதம் அடைந்தனர்.

7. திருக்குறுங்குடி வைணவத் திருத்தலமாக இருப்பினும், இங்கு கிறிஸ்துமஸ் சிறப்பாகக் கொண்டாடப்படுவதாகத் தெரிகிறது !

திருக்குறுங்குடி கிராமத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 289 ***

Saturday, January 27, 2007

288. குழந்தை லோகபிரியா நலம்

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்த 'சற்றே நீண்ட' பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

லோகபிரியாவுக்கு ஜனவரி 24-ஆம் தேதி காலை இதய அறுவை சிகிச்சை, ராமச்சந்திரா மருத்துவமனையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ICU-வில் வைத்து கவனிக்கப்பட்டு வருகிறாள். மெல்ல நலமடைந்து வருகிறாள். இன்னும் 2-3 நாட்கள் ICU சிகிச்சை தொடரும் என்று டாக்டர் கூறினார். இன்று காலையில் கூட குழந்தையின் தந்தையுடன் பேசினேன். எல்லாம் நல்லவிதமாக முடிந்ததில் அவருக்கும் குடும்பத்தாருக்கும், மகிழ்ச்சியும் மனநிறைவும் என்பதை அவர் குரலிலேயே உணர முடிந்தது ! இன்னும் இரண்டொரு நாட்களில், நானும் சங்கரும் குழந்தையைப் பார்க்கப் போகிறோம்.

நமது வலைப்பதிவு நண்பர்கள் வாயிலாக 56,500 ரூபாய் உதவித்தொகையாக சேகரிக்க முடிந்தது. நமது நண்பர்களிடமிருந்து உதவி வரத் தொடங்குவதற்கு முன்பாகவே, ரூபாய் 50000 (விப்ரோவைச் சேர்ந்த நண்பர்கள் மற்றும் மாருதிராவ் என்ற தெலுங்குப்பட தயாரிப்பாளர் வாயிலாக) மருத்துவமனையில் செலுத்தப்பட்டிருந்தது.

மொத்தத் தேவை ரூ. 1,25,000 என்று உதவி வேண்டி நான் இட்ட முந்தைய பதிவில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். அப்போது தான், ஒரு சந்தோஷமான திருப்பம் ஏற்பட்டது. இந்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கும் போது...நாம் (Sankar, Ramki) மற்றும் நம் வலையுலக நண்பர்கள் கிட்டத்தட்ட 56500/- வரை திரட்டி விட்ட நிலையில்....இன்ப அதிர்ச்சியாக சங்கர் வீட்டின் அருகில் இருக்கும் கமலா வேதம் எஜுகேஷனல் மற்றும் சேரிட்டி டிரஸ்ட் நடத்தும் டாக்டர்.ரவிசங்கர் வேதம் அவர்கள் டிரஸ்ட் மூலமாக ரூ.75000/- கான காசோலை அளித்துவிட்டார்.

ஆக, மொத்தத் தொகையும் (1,25,000) கிடைத்து மருத்துவமனையில் செலுத்தப்பட்டது ! நமது வலையுலக நண்பர்கள் அளித்த உதவித் தொகையை வைத்து என்ன செய்யலாம் என்பதற்கு அவர்களே ஆலோசனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என்னளவில் சிலவற்றைச் சொல்கிறேன். முடிவு உங்கள் விருப்பம்.

1. லோகபிரியாவின் பெயரில் வைப்புத் தொகையாக வங்கியில் கட்டி, அதன் வட்டியை குழந்தையின் தந்தை பெற்றுக் கொள்ளலாம்.

2. இன்னொரு உதவி முயற்சிக்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

3. நீங்கள் அளித்த தொகையை திருப்பித் தந்து விடலாம்.


அடுத்து, செந்தழல் ரவி, மகாலஷ்மியின் கல்வி நிதியிலிருந்து (அதிகமாக இருந்த) ஒரு 20000 ரூபாயை எனக்கு அனுப்பினார். ரவி அனுப்பிய தொகையை (பின்னர் மற்றொரு உதவி முயற்சிக்குத் தேவைப்பட்டால் தரத் தயாராக இருப்பதாக எனக்கு எழுதியிருக்கும் ரவிக்கு நன்றிகள் பல !) அவருக்கு திருப்பி அனுப்பி விட்டேன்.

லோகபிரியாவின் மருத்துவ உதவிக்காக பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த முயற்சிகளில் லோகபிரியாவின் தந்தைக்கு நானும் என் நண்பன் சங்கரும் எங்களால் இயன்ற அளவில் உதவி செய்தோம். அவை குறித்து விரிவாக ஒரு மெயில் எழுதி அனுப்புமாறு சங்கரிடம் கேட்டிருந்தேன். அம்மடலிலிருந்து தகவல்களைத் தருகிறேன். எங்களைத் தவிர, குழந்தையின் தந்தை எடுத்த முயற்சிகளில் சம்பந்தப்பட்ட பலரும் எத்தகைய நல்ல உள்ளம் படைத்தவர்கள் என்பதை எடுத்துச் சொல்வது, என் கடமையும் கூட ! இதை சங்கர் தன் மடலில் "உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது" என்று சுவைபடக் கூறியிருந்தார் !!!

குழந்தை லோகப்ரியாவிற்காக செய்யப்பட்ட முயற்சிகள் மற்றும் அதன் விவரங்கள்:

1.முதல்வருக்கு மனு கொடுக்கப்பட்டது......முதல்வர் அலுவலகத்திலிருந்து எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் குழந்தைக்கு தேவையான சிகிச்சைகளை இலவசமாக அளிக்க ஆவன செய்வதாக கூறி கடிதம் வந்தது....ஆனால் 5 மாத குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய போதிய வசதிகள் அங்கு இல்லாத காரணத்தால் அங்கு செய்ய முடியவில்லை

2.திரு.தொல்.திருமாவளவனை சந்தித்த போது அவர் தனக்கு தெரிந்த தலைமை மருத்துவரிடம் (எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனை) தொலை பேசி ஆவன செய்ய வேண்டுகோள் விடுத்தார்.அவரும் முடிந்தது செய்வதாகவும் அறுவை சிகிச்சை இன்றி குணப்படுத்த முயல்வதாகவும் உறுதியளித்தார்.

3. ரஜினி ரசிகர் ஒருவர் ரூ.10000 வழங்கினார்


4.பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் போட்டதற்கு அவர்கள் உடனே பதிலளித்து ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கடிதம் எழுதி அதில் மருத்துவ செலவில் பாதி அல்லது ரூ.50000/- இதில் எது குறைவோ அதை பிரதமர் நிதியிலிருந்து தர in principle ஒப்புதல் அளிப்பதாகவும் இந்தத்தொகையை அறுவை சிகிச்சை முடிந்த பிறகு தகுந்த ஆதாரம் மற்றும் பில்களுடன் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம் எனவும் சொல்லியிருந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பிந்தான் இந்தப் பணம் வரும்...ஆனால் முழுப்பணம் கட்டினால்தான் சிகிச்சை செய்வோம் இந்தக் கடிதத்தின் அடிப்படையில் செய்யவோ தள்ளுபடி தரவோ இயலாது என்று கூறி விட்டனர்.

5.தலைமை மருத்துவர் திரு.ரஞ்சித் அவர்கள் 125000 வேண்டாம்... கிட்டத்தட்ட 100000 இருந்தாலே சிகிச்சை தருகிறோம் என அன்புடன் இயைந்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

6.விப்ரோ நிருவனத்தில் வேலை பார்க்கும் நண்பர்கள் சேர்ந்து 40000/- காசோலை வழங்கியுள்ளனர்

7.வீட்டில் அறுகில் உள்ள தெலுங்கு பட இயக்குனர் தயாரிப்பாளர் திரு.மாருதி ராவ் அவர்களது வீட்டில் 10000/- அளித்தனர்

8.நாமும் சொந்தமாகவும் ,இணைய நண்பர்கள், வலையுலக நண்பர்கள் மூலம் எடுத்த முயற்சிகளும் வலையுலக நண்பர்கள் முழு முனைப்புடன் செய்த உதவிகளும், பேராதரவும் பற்றி அதிகம் எழுதவில்லை.

9. .சத்திய சாயி டிரஸ்டிற்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு மருத்துவமனை பொது மேலாளர் திரு.ஸ்ரீகுமார் அவர்களிடமிருந்து சான்று கடிதம் பெற்று தந்தால் ரூ.30000/- வரை உதவி செய்வதாக பதில் கடிதம் வந்தது.

11.இது தவிர சினேகா என்ற அமைப்பினர் மற்றும் இன்போஸிஸ் நிருவனத்திலிருந்து ராஜதுரை என்கின்ற ஒரு நண்பர் முதலியோர் குழந்தையின் தந்தையை சந்தித்து பணம் மற்றும் உதவி தர முன் வந்ததாக தெரிகிறது. ஆனால் அதற்கு முன்னமே முழு தொகை சேர்ந்ததால் இவர்களது உதவி நன்றி கூறி மறுக்கப்பட்டது.

12. லோகபிரியாவின் தந்தை அருள் உதவி வேண்டி அலைந்த அலைச்சல்களை இங்கே நிச்சயம் குறிப்பிட வேண்டும் !


சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவமனை கணக்கில் மீதமுள்ள பணம் மற்றும் பிரதமர் நிதியிலிருந்து முயற்சித்து பெறப்போகும் பணமும் குழந்தை கணக்கில் ஆஸ்பத்திரியில் இருக்கும் என்றும் post operation care இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு செக்கப் எக்ஸிஜன்சி போன்றவற்றிற்கு உபயோகிக்கப்படும் என்றும் எந்த பணப்பட்டுவாடாவும் செய்யப்பட மாட்டாது என்பதும் நாம் கேட்டறிந்த விஷயங்கள்.

சின்னச் சின்ன செய்திகள்...ஆனாலும் குறிப்பிட வேண்டியவை

நடிகர் திரு.விக்ரம் அவர்களுக்கு உதவி கேட்டு அனுப்பப்பட்டவுடன் 2007 ஆரம்பத்தில் priority list-ல் குழந்தை லோகப்ரியாவின் பெயர் அவர்கள் உதவிப் பட்டியலில் இருந்தது. ஆனால் அதற்கு முன்னமே பணம் சேர்ந்து விட்டபடியால் அங்கிருந்து உதவி தேவையில்லாமல் போய் விட்டது. அப்பொழுது தெரிந்த மற்றும் ஆஸ்பத்திரியில் அறிந்த விஷயம் திரு.விக்ரம் அவர்கள் வருடம் முழுவதும் பல குழந்தைகளுக்கு இந்த மாதிரி அறுவை சிகிச்சைக்கு உதவி செய்வதோடல்லாமல் அவர் துணைவியாருடன் வந்து இந்த குழந்தைகளை சிகிச்சைக்கு முன்னும் பின்னும் பார்த்து ஆறுதல் மற்றும் தைரியம் சொல்லி செல்வது வழக்கம் .
A real STAR...& Star family.

நாம் குழந்தை லோகப்ரியாவிற்கு உதவி செய்வது பற்றி பேசிக்கொண்டிருந்த போது முன்னர் உதவி பெற்ற குழந்தை ஸ்வேதாவின் தந்தை " சார்..நான் என் குழந்தைக்காக உதவி கேட்டலைந்த போது கிடைத்த தொடர்புகள் பற்றி விவரங்கள் தருகிறேன் மற்றும் நானும் அலைந்து திரிந்து உதவ உங்களுடன் வருகிறேன் என முகம் தெரியாத இன்னொரு குழந்தைக்காக புறப்பட்ட போது தெரிந்தது
Helping and Being Good also is Contagious

இந்தக் குழந்தை வசிக்கும் சேரியில் வசிக்கும் அனைத்து கூலி தொழிளாலர்கள் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் சேர்ந்து ஐந்தும் பத்துமாக 2000/- சேகரித்தளித்த போது தெரிந்தது...
Certainly they are not poor in their Heart

உதவிக்கடிதத்தை நகல் எடுக்கச் சென்ற இடத்தில் கடிதம் படித்த நகலக உரிமையாளர் பிரதமர் அலுவலகம் போன்ற இடங்களுக்கு மனு எழுதிக் கொடுத்ததோடல்லாமல் உதவிக்கடிதங்கள் மற்ற பிற ஆவணங்களை இலவசமாக நகலெடுத்து தந்ததோடல்லாமல் அனுப்ப உதவியும் செய்து...
You can also be charitable in your Business too...என்று நிருபித்துவிட்டார்

இதிலிருந்து தெரிவது......after all the world is not as bad as we may think :)

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 288 ***

Thursday, January 25, 2007

'சூரிய நமஸ்கார' சர்ச்சை !

"வந்தே மாதரம்" குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, இப்போது, பலத்த எதிர்ப்புகளுக்கு இடையில், மத்தியப்பிரதேசத்தின் பிஜேபி அரசு, சூரிய நமஸ்காரம் சார்ந்த தனது கூட்டு யோகா நிகழ்ச்சியை, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் நடத்த உள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவ மாணவிகள் இதில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அவர்கள் சூரிய நமஸ்காரத்தையும், 5 வகையான பிராணாயப் பயிற்சிகளையும் மேற்கொள்வார்கள் என்று அரசு செய்திக் குறிப்பு கூறுகிறது.

எல்லா பள்ளிகளிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்திந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் (AIMPLB) பல இஸ்லாமிய இயக்கங்களை அழைத்து ஒரு கூட்டம் நடத்தி, அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்று குற்றம் சாட்டியுள்ளது. இந்த 'சூரிய நமஸ்கார' நிகழ்ச்சியை தடை செய்ய ஆளுனர் பல்ராம் ஜாக்கரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஜமைத் உல்மா ஹிந்த் (JUH), தடை வேண்டி, உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

JUH-ஐ சேர்ந்த ஹாஜி மொஹமத் ஹரூண், "யோகப் பயிற்சிகளை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அதே நேரத்தில், சூரிய நமஸ்காரம் என்ற பெயரில், இந்துக்கள் அல்லாத மாணவ மாணவிகளையும், சுலோகங்களைச் சொல்லி சூரியனை வழிபட வைப்பது, அரசியல் சட்டத்திற்கு புறம்பானது, இஸ்லாமிய மதக் கொள்கைகளுக்கும் எதிரானது" என்று கூறியுள்ளார்.

கிறித்துவர்களும் அரசின் இந்த செயலைக் கண்டித்துள்ளனர். யோகா என்ற பெயரில், அரசு மதவெறியைத் தூண்டுவதாக, மத்தியப்பிரதேச கத்தோலிக ஆலயத்தைச் சேர்ந்த ஆனந்த் முட்டுங்கல் குற்றம் சாட்டியுள்ளார். 'முதலில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது அவரவர் விருப்பத்தைச் சார்ந்தது என்று கூறிய அரசு, மாணவ மாணவிகளை நிகழ்ச்சிக்கு அனுப்புமாறு பள்ளிகளை நிர்பந்தப்படுத்துகிறது' என்று மேலும் கூறியுள்ளார் !

இவற்றுக்கிடையே, இஸ்லாமிய மக்கள் தங்கள் பிள்ளைகளை நிகழ்ச்சி அன்று பள்ளிக்கு அனுப்பப் போவதில்லை என்று கூறி வருகின்றனர். இன்று நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி, நடந்ததா (எந்த அளவில்) என்பது குறித்து அறிந்தவர் கூறுங்களேன் !

Courtesy: Indian Express

*** 287 ***

Saturday, January 20, 2007

286. பெரியாருக்கு மேலும் சிலைகள் !

மார்கழி மாதத்தில் நான் பதிந்த குளிர்ச்சியான திருப்பாவை விளக்கப் பதிவுகளைத் தொடர்ந்து, சுஜாதாவை பொதுவில் வைத்து பலரும் கும்மியதைத் தொடர்ந்து, தைப்பொங்கல் கொண்டாடுதல் குறித்த காரசார வலைப்பதிவு விவாதங்களைத் தொடர்ந்து, பெரியார் சம்பந்தப்பட்ட சற்று சூடான புது விவகாரம் உங்கள் பார்வைக்கு :) கொஞ்ச நாள் வெளியில் இருந்து, மீண்டும் ஜோதியில் (சரவணபவன் அண்ணாச்சிக்கும் இந்த ஜோதிக்கும் தொடர்பு இல்லீங்கண்ணா!) ஐக்கியமாக முடிவெடுத்ததும் இப்பதிவுக்கு ஒரு காரணம் ;-) சரி, மேட்டருக்கு போகலாமா !

ஸ்ரீரங்கத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருக்கோயில்களுக்கு அருகே, 128 பெரியார் சிலைகளை நிறுவ இருப்பதாக திராவிட கழகம் கூறியிருப்பதற்கு, தமிழக முதல்வரின் மறைமுக ஆதரவு இருப்பதாக அவுட்லுக் செய்தியொன்று கூறுகிறது. ஏற்கனவே, ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதையும், அதைத் தொடர்ந்து அயோத்தியா மண்டபம் மற்றும் இன்னபிற இடங்களிலும் நடந்தேறிய வன்முறை நிகழ்விகளையும் வைத்துப் பார்க்கும்போது, இவ்வாறு நடந்தால் (மெனக்கெட்டு கோயில்களுக்கு அருகே பெரியார் சிலைகள் நிறுவ இருப்பதை மட்டுமே சுட்டுகிறேன்!) ஏற்படவிருக்கும் பிரச்சினைகளை நாடு தாங்குமா என்ற கேள்வி எழுகிறது ! பெரியார் உயிரோடு இருந்திருந்தால், நடப்பவற்றைக் கண்டு நிச்சம் அவரே வெறுத்துப் போயிருப்பார் !!!

ஒரு பேட்டியில், முதல்வரின் (அவரது பாணியிலான!) கிண்டலான பேச்சு வேறு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் உடையற்ற சிலைகளைக் காட்டிலும், வெளியே உள்ள பெரியார் சிலை கண்ணியமான தோற்றத்தில் தானே காட்சியளிக்கிறது, கோயில் அர்ச்சகர்களே சற்று தயக்கத்துடன் தான் அச்சிலைகளுக்கு உடை உடுத்த வேண்டியுள்ளது என்று பொருள்பட கூறி, முத்தாய்ப்பாக, ஸ்ரீரங்கத்து பெரியார் சிலைக்கு ஏன் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து, மதத்தை முன்னிறுத்தி மக்களிடையே பகைமை உணர்வை வளர்க்க முயற்சிப்பதைக் காரணமாகக் காட்டி, முதல்வர் மீது வழக்கு தொடரப் போவதாக சில இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.

நன்றி: OUTLOOK

*** 286 ***

Tuesday, January 16, 2007

வங்கக்கடல் கடைந்த மாதவனை - TPV30 - பகுதி II

இப்பாசுரத்தின் முதற்பகுதியை வாசித்து விட்டுத் தொடரவும்.

முதல் பாசுரத்தில், நோன்புக்கான நேரம், நோன்புக்கான மூலப்பொருள் (கிருஷ்ணன்) குறித்தும்,

2-வது பாசுரத்தில், நோன்பின்போது செய்யத் தகாதவை பற்றியும்,

3-வது பாசுரத்தில், நோன்பினால் விளையும் நன்மைகள் குறித்தும்,

4-வது பாசுரத்தில், மழைக்காக வருணனை வேண்டியும்,

5-வது பாசுரத்தில், நோன்புக்கு ஏற்படக் கூடிய தடைகளை கண்ணனே நீக்க வல்லவன் என்று போற்றியும்,

6-வது பாசுரத்திலிருந்து 15-வது பாசுரம் வரையில், கோகுலத்தில் வாழும் கோபியரை, உறக்கம்
விட்டெழுந்து, கண்ணனைத் தரிசித்து வணங்கச் செல்லும் அடியார் கூட்டத்தோடுச் சேருமாறு விண்ணப்பித்தும்,

16-வது பாசுரத்தில், நந்தகோபர் மாளிகையில் உள்ள துவார பாலகரை எழுப்பி, உள் செல்ல அனுமதி வேண்டியும்,

17-வது பாசுரத்தில், நந்தகோபர், யசோதா பிராட்டி, கண்ணபிரான், பலராமன் என்று நால்வரையும் விழித்தெழுமாறு வரிசையாக விண்ணப்பித்தும்,

18-வது பாசுரத்தில், நப்பின்னை பிராட்டியை மிக்க மரியாதையுடன் விழித்தெழ வேண்டியும்,

19-வது மற்றும் 20-வது பாசுரங்களில், நப்பின்னை, கண்ணன் என்று, ஒரு சேர, இருவரையும் உறக்கம் விட்டு எழுமாறு விண்ணப்பித்தும்,

21-வது மற்றும் 22-வது பாசுரங்களில், (கோபியர்) கண்ணனின் கல்யாண குணங்களைப் போற்றியும், தங்கள் அபிமான பங்க நிலைமையை ஒப்புக் கொண்டும், கண்ணனின் அருட்கடாட்சத்தை மட்டுமே (தங்கள் சாபங்கள் ஒழிய) நம்பி வந்திருப்பதையும்,

23-வது பாசுரத்தில், கிருஷ்ண சிம்மத்தை அவனுக்கான சிம்மாசனத்தில் அமர வேண்டியும்,

24-வது பாசுரத்தில், அம்மாயப்பிரானுக்கு மங்களாசாசனம் செய்தும் (திருப்பல்லாண்டு பாடிப்
போற்றியும்),

25-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களை ரட்சித்து அரவணைக்க அவனைத் தவிர வேறு
மார்க்கமில்லை என்று உணர்த்தியும்,

26-வது பாசுரத்தில், நோன்புக்கான பொருள்களை கண்ணனிடம் யாசித்தும்,

27-வது பாசுரத்தில், பாவை நோன்பு முடிந்ததும், (கோபியர்) தாங்கள் வேண்டும் பரிசுகளை
பட்டியலிட்டும்,

28-வது பாசுரத்தில், (கோபியர்) தங்களது தாழ்மை, கண்ணனின் மேன்மை, அவனுடனான பிரிக்க முடியாத உறவு, தங்களது பாவ பலன்களை நீக்கக் கோருதல் ஆகியவை பற்றியும்,

29-வது பாசுரத்தில், எந்நாளும் பிரியாதிருந்து கண்னனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு அருள வேண்டியும்,

30-வது பாசுரத்தில், திருப்பாவை சொல்லும் அடியார்கள் கண்ணபிரானின் அன்புக்கும், அருளுக்கும் பாத்திரமாகி, பேரானந்தம் அடைவர் என்ற செய்தியை வெளியிட்டும்

30 அற்புதமான பாசுரங்கள் வாயிலாக, முதற்பாடலிலிருந்து இறுதிப் பாசுரம் வரை, தொடர்ச்சியும் ஓட்டமும் பங்கப்படா வகையில், கோதை நாச்சியார், ஒரு கிருஷ்ண காவியத்தையே படைத்துள்ளார் ! இனிய எளிய தமிழில் வேத சாரத்தை உள்ளர்த்தங்களில் வெளிப்படுத்தும் திருப்பாவை, 'கோத உபநிடதம்' என்று போற்றப்படுகிறது !


பாசுரச் சிறப்பு:

1. இங்கே "வங்கக் கடல் கடைந்த"வனை 'மாதவன்' என்று ஆண்டாள் அழைக்கக் காரணம், அவரது ஆச்சார்யனும், தந்தையும் ஆன பெரியாழ்வாரின் உபதேசத்தை மனதில் வைத்தே என்று ஒரு கருத்துண்டு, அதாவது, பெரியாழ்வார் பாடியது போல, "மார்வம் என்பதோர் கோயில் அமைத்து மாதவன் என்பதோர் தெய்வத்தை நாட்டி" ! மேலும், மாதவன் என்பதற்கு பிராட்டியோடு கூடி இருப்பவன் என்று பொருள் இருப்பதால், திருப்பாற்கடலைக் கடைந்து அப்போது தோன்றிய திருமகளை தன் திருமார்பில் தரித்துக் கொண்ட அம்மாயப்பிரானை 'மாதவன்' என்றழைப்பது பொருத்தமாகிறது !

2. 'கேசவன்' என்ற திருநாமம் பரமனது பரத்துவத்தை உணர்த்துகிறது. கேசவனில் உள்ள 'க' சப்தம் பிரம்மனையும், 'சவன்' ஈஸ்வரனையும் குறிக்கின்றன. அதாவது, பிரம்மனும், சிவனும் திருமாலுக்குள் அடக்கம் என்பதைச் சொல்கிறது.

3. "வங்கக்கடல் கடைந்த" என்ற திருச்செயல், அடியார் மேல் பரமனுக்குள்ள வாத்சல்யத்தையும், பரமனது எங்கும் வியாபித்திருக்கும் நிலையையும் உள்ளர்த்தமாக கொண்டிருப்பதாக பெரியோர் கூறுவர்.

4. 'பட்டர்பிரான் கோதை சொன்ன' என்று அறிவிப்பதன் மூலம், தன் தந்தையே தன் ஆச்சார்யன்
என்பதை உணர்த்துகிறார், சூடிக் கொடுத்த நாச்சியார் ! மதுரகவியாழ்வாரும், "தென்குருகூர் நம்பிக்கு அன்பானை மதுரகவி சொன்ன சொல்" என்று பாடியே, கண்ணிநுண் சிறுத்தாம்பை நிறைவு செய்துள்ளார். ஆகையால், ஆண்டாளின் திருப்பாவையும், மதுரகவியின் கண்ணிநுண் சிறுத்தாம்பும் ஆச்சார்யனை முன்னிறுத்தியதால், தனிச்சிறப்பு பெற்ற பிரபந்தங்களாகக் கருதப்படுகின்றன.

5. செங்கண் - பரமனின் திருக்கண்களானது, திவ்யப்பிரபந்தத்தில் பல இடங்களில் சுட்டப்பட்டுள்ளன ! அவை அழகும் வசீகரமும் கொண்டதோடன்றி, பரமனின் அருட் கடாட்சத்தை அடியார்களிடம் செலுத்தும் திரு அவயங்களாக அறியப்படுகின்றன ! ஆழ்வார்கள் பரந்தாமனின் திருக்கண்கள் மேல் பெருங்காதல் கொண்டவர்கள் !!! ஆண்டாளும், கண்ணனது கருணை பொழியும் கண்களை, திருப்பாவையில்

கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்* பங்கயக் கண்ணானை
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்* அங்கண் இரண்டும்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்


என்று 5 இடங்களில் குறிப்பிட்டுள்ளார்.

6. "கோவிந்தா" என்ற திருநாமம் திருப்பாவையில் மூன்று முறை (கூடாரை வெல்லும், கறவைகள் பின்சென்று, சிற்றஞ்சிறுகாலே வந்துன்னை என்று 3 பாசுரங்களில்) குறிப்பிடப்பட்டிருப்பது போல, "நாராயணா" என்ற திருநாமமும்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த - "நாராயணனே நமக்கு பறை தருவான்",
கீசுகீசென்று ஆனைச்சாத்தன் கலந்து - "நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்",
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் - "நாற்றத் துழாய் முடி நாராயணன்"


என்று மூன்று முறை வருகின்றன !

7. செல்வத் திருமால் - பரமன் ஆன ஸ்ரீநிவாசன், அளவிட முடியாத ஐசுவர்யங்களையும், அடியார்கள் பால் பேரன்பும், கருணையும் உடையவன்.
த்வய மந்த்ரத்தின் பூர்வப் பகுதியின் 'ஸ்ரீமத்' சப்தம் 'மாதவன்' என்று வரும் பாசுரத்தின் முதலடியிலும், உத்தரப் பகுதியினுடையது 'செல்வத் திருமால்' என்று வரும் கடைசி அடியிலும் வெளிப்படுவது சிறப்பு !

8. 'எங்கும் திருவருள் பெற்று" என்பது இம்மையிலும், மறுமையிலும் அவன் திருவருளை வேண்டுவதைக் குறிக்கிறது.

சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 285 ***

Saturday, January 06, 2007

இந்திய கிரிக்கெட் - சொந்தச் செலவில் சூன்யம்

இந்திய-தென்னாபிரிக்காவுக்கு இடையேயான 3-வது டெஸ்டின் நான்காம் நாள், இந்தியா ஆடிய மட்டரக கிரிக்கெட்டைப் பார்க்கும் துர்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டது. சொந்தச் செலவில் சூன்யம் என்பது இது தானோ ??? அனுபவமும், திறமையும் உள்ள அணி வீரர்கள் கடைபிடித்த கேவலமான அணுகுமுறை, இந்த டெஸ்டில் தோல்வி அடையும் நிலைக்கு இந்தியாவை தள்ளி விட்டது ! இந்தியா செய்த தவறுகளும் முட்டாள்தனங்களும் ஏராளம்.

1. முதல் இன்னிங்க்ஸில் திறமையாக ஆடிய தினேஷ் கார்த்திக்கை, தொடக்க ஆட்டக்காரராக களமிறக்காமல், 'Out of Form' சேவாக்-ஐ முதலில் ஆட அனுப்பியதில், இந்தியாவுக்கு 6/2 என்று உடனடியாக பின்னடைவு ஏற்பட்டது.

2. சச்சின் ஆடிய ஆட்டம், அபத்தத்தின் உச்சம் ! இத்தனை சாதனைகளைப் படைத்தவர், கிரிக்கெட் அறிவு மிக்கவர் என்று போற்றப்படும் ஒருவர், ஆட்டத்திலிருந்தே சீக்கிரம் ஓய்வு பெற மாட்டாரா என்ற ஆதங்கம் தோன்றும் வகையில், மிக மோசமாக விளையாடினார் !

3. தனது முதல் டெஸ்டில் விளையாடும் 'சின்னப்பையன்' ஹாரிஸ¤க்கு, ஷேன் வார்னுக்கு தரும் மரியாதையை வழங்கி கௌரவித்தது, பார்க்கக் கொடுமையாக இருந்தது ! எப்படி இருந்த சச்சின் இப்படி ஆயிட்டாரே என்ற பரிதாபமே மிஞ்சியது. கிட்டத்தட்ட 75 பந்துகளில் 14 ரன்கள் எடுத்தார். அம்பயரே அவரது மட்டமான ஆட்டத்தைப் பார்க்கச் சகிக்காமல், அவருக்கு LBW கொடுத்து, அவரை களத்தை விட்டு வெளியேற்றியது சரி என்றே கூறுவேன் ;-)

4. 114-3 என்பதிலிருந்து 121-6 என்ற சரிவு ஏற்பட்டதற்கு சச்சினே பொறுப்பேற்க வேண்டும் ! இந்த டெஸ்டில் இந்தியா தோல்வி அடைந்தால் (அடைவது உறுதி என்றே நினைக்கிறேன்!) சச்சினே அதற்கு முக்கியக் காரணம் என்று திட்டவட்டமாகக் கூறுவேன்.

5. கங்குலி களத்தில் இருந்தவரை, நன்றாக விளையாடிய டிராவிட்டும், சச்சினின் அபத்த அணுகுமுறை அவரையும் தொற்றிக் கொண்டதால், சீனப் பெருஞ்சுவராகவே மாறி விட்டார் ! இறுதியில், அடிக்கப் போய், பந்து வீச்சாளர் ஹாரிஸ¤க்கு ஒரு மென்மையான return catch கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

6. லஷ்மணை ரன் அவுட் ஆக்கிய பெருமையும் சச்சினையே சாரும் ! தான் பந்தை எதிர்கொள்ள வேண்டுமே என்ற பயத்தில், இல்லாத இரண்டாவது ரன்னுக்கு, லஷ்மணை அழைத்து அவரை வீட்டுக்கு அனுப்பினார் !

7. நன்றாக மன உறுதியுடன் ஆடிய கங்குலி, முக்கியமான தருணத்தில், கவனம் சிதறி, கல்லியில் காட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ! அவர் சதம் அடிக்க நல்ல வாய்ப்பு இருந்ததாகவே கருதுகிறேன்.

8. நமது சீனியர் வீரர்கள் தமிழ்நாட்டு இளஞ்சிங்கம் கார்த்திக்கிடம் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய இருக்கின்றன ! 2-வது இன்னிங்க்ஸில் மீண்டும் சிறப்பாக ஆடி, 48 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்கா, ஆட்ட நேர இறுதியில், 55-2 என்ற நிலைக்கு முன்னேறி இருந்தது. டெஸ்டின் கடைசி நாள் இன்னும் 155 ரன்கள் எடுக்க வேண்டும், எடுத்து வெற்றி பெற்று, 2-1 என்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி விடுவார்கள் என்றே நினைக்கிறேன். நமது பந்து வீச்சாளர்களாவது (முக்கியமாக அனில் கும்ப்ளே) கொஞ்சம் fighting spirit-ஐ காட்டுவார்களா ? அல்லது மழை வந்து இந்திய அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றுமா ?

இப்போட்டியில் (ஒரு வேளை அதிசயமாக!) இந்தியா வெற்றி பெற்றாலும், சச்சினையும், சேவாக்கையும் சில மாதங்கள் (கங்குலியைப் போல) அணியிலிருந்து விலக்கி வைத்தல் நலம் பயக்கும் என்பது என் எண்ணம் !!! அவர்களுக்கு வேண்டிய வாய்ப்புகள் வழங்கியாகி விட்டது.

No one is indispensable and rules and policies are applicable to every one !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 276 ***

Sunday, December 31, 2006

உயிர் வாழ உதவி வேண்டி - 2

அன்பான நண்பர்களே,

சிரமம் பார்க்காமல் இந்தப் பதிவை வாசித்து விடும்படி ஒரு அன்பான வேண்டுகோளுடன்,

இரு மாதங்களுக்கு முன் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்காக சிங்கை நண்பர் அன்பு, என் வலைப்பதிவு வாயிலாக முன் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து, பல நண்பர்கள் பொருளுதவி செய்தனர். கிட்டத்தட்ட 40000 ரூபாயை சேகரித்து, மருத்துவமனைக்கு அனுப்ப முடிந்தது.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/11/blog-post_04.html

ஸ்வேதாவுக்கு நல்ல விதமாக இதய அறுவை சிகிச்சையும் நடைபெற்று, தற்போது நலத்துடன் இருக்கிறாள்.

பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/12/blog-post_17.html

ஒரு வாரம் முன்பு, ஸ்வேதாவின் வீட்டுக்குச் சென்று அவளை பார்த்து விட்டு வந்தேன். சக வலைப்பதிவர்களான சங்கரையும், மதுமிதாவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்து குழந்தை நலம் பெற்றதில், அவள் பெற்றோருக்கு அளவில்லா மகிழ்ச்சியும், எங்களுக்கும் மிகுந்த மனநிறைவும் ! இனிமையான சந்திப்பும் கூட. ஸ்வேதா எங்களை டாக்டர்கள் என்று நினைத்து முதலில் மிரண்டு எங்கள் கிட்டேயே வர மறுத்தாள் ! பின், பயம் விலகி, சற்று சிரிக்கவும், கிளம்பும் சமயம் டாட்டாவும் காட்டினாள் :)

இரு வாரங்களுக்கு முன், நண்பர்கள் ரஜினி ராம்கி மற்றும் சங்கர் மூலமாக இன்னொரு பிஞ்சுக் குழந்தைக்கு (லோகப்பிரியா) மருத்துவ உதவி தேவைப்படுவதாக செய்தி வந்தது. ராம்கி தனது ரஜினி ரசிகர்கள் சங்கம் மூலம் 12000 ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாகக் கூறினார். சங்கர், லோகப்பிரியாவின் தந்தையை சந்தித்து விவரங்களைக் கேட்டு எனக்கு அனுப்பிய மடலையும், ராம்கியின் மடலையும், உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். குழந்தைக்கு ஒரு மாதத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.

********************************
அன்புள்ள பாலாஜி

இதனுடன் குழந்தை லோகப்ரியாவின்(5 Month's old) மருத்துவ உதவிக்காக இருதய நிபுணர் டாக்டர் . M.S.ரஞ்சித் கொடுத்துள்ள கடிதத்தை இணைத்துள்ளேன்.

குழந்தை இப்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ளது. அங்கு தேவையான உபகரணங்கள் இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவர்கள் குழந்தையை ராமச்சந்திராவில் காட்டும் படி பரிந்துரைத்துள்ளனர்.
இம் குழந்தையின் தந்தை போன வார இறுதியில் என்னை வந்து சந்தித்தார்.
குழந்தை லோகப்ரியாவின் தந்தை திரு.அருள் மீன்பாடி வண்டி எனப்படும் ட்ரை சைக்கிள் ஓட்டுகிறார்.தாயார் ஒரு வீட்டில் வீடு பெறுக்கும் வேலை செய்கிறார்.இப்போது குழந்தையின் உடல்நிலை காரணமாக அதுவும் போக முடியவில்லை.

இவர்கள் வசிப்பது எனது வீட்டிற்கு அருகில் உள்ள குடிசைப் பகுதியில்
இவர்களது முதல் ஆண் குழந்தையும் 2 ஆண்டுகளுக்கு முன் இதே போல் இதய வியாதியால் இறந்து விட்டது..சரியான டையக்னாஸிஸ் மற்றும் சிகிச்சையின்றி...கொடுமை என்னவென்றால் என்ன வியாதி என்றே இவர்களிடம் சொல்லப் படவில்லை.ஹெரிடிடரி என்றும் விளக்கவில்லை...இது தெரியாத அறியாமையால் இரண்டாவது குழந்தையும் பெற்று அதுவும் அதே நோயால் அவதியுரும் நிலை எந்த பெற்றோருக்கும் வர வேண்டாம்அப்போதே சொல்லியிருந்தால் இரண்டாவதாக குழந்தை பெற்றே இருக்க மாட்டோம் என இப்போது கதறுகிறார்கள்.

அறியாமையால் உதவுவதற்கு யாருமின்றி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை கஷ்டப்பட்டு ரூ.20,000/- சேகரித்துள்ளனர்( அவர்கள் குடிசைப் பகுதியில் உள்ள அனைத்து கூலி வேலை/வீட்டு வேலை செய்யும் மக்கள் 50, 100 என உதவி செய்து இந்த தொகையை கொடுத்துள்ளனர்
எங்கள் தெருவில் உள்ள தெலுங்கு டைரக்டர்,தயாரிப்பாளர் மாருதி ராவ் ரூ.10,000/- உதவி செய்துள்ளார்

ஆக மொத்தம் ரூ 30,000/- சேர்ந்துள்ளது...மேலும் 100000 தேவை இதில் பெரும் பகுதி சேர்ந்து விட்டால் கூட அறுவை சிகிச்சை செய்து தர டாக்டர் சம்மதித்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்காக ஜனவரி-27 என நாள் குறித்திருக்கிறது...இருந்தாலும் பணம் சேர்ந்து விட்டால் முன்னமே செய்து விடுவார்கள்.

அன்புடன்...ச.சங்கர்
*****************************

Here is one Medical Request. Baby. Loga Priya aged 3 months, admitted in Shri Ramachandra Hospital, Porur, suffering from Congenital Hear Disease and she has to undergo Open Heart SErgety which will cost around 1.25 lakhs and the same has to be done by January 2007. I've verified the same request and it's a genuine one, family is a lower middle class and father is a technician.

Name of the Patient : Baby. Loga Priya
Ref. No. 0951431
Consultant : Dr. M.S. Ranjit,
Professor Paediatric Cardilology,
Sri Ramachandra Hospital.
Contact No. 24768403 Ext. 450 & 464
E-Mail : ranjitmadathil@yahoo.com

* Any amount can be made but it should reach on or before 27.1.2007

Thanks & Regards,
Ramki
************************

தங்களால் இயன்ற உதவியை, அது எவ்வளவு சிறியதாக இருப்பினும், செய்யுமாறு வேண்டுகோள் வைக்கிறேன். உதவி செய்வதற்கு, கீழ்க்கண்ட மின் மடல் முகவரிகளில் தொடர்பு கொள்ளவும். நன்றி.

rajni_ramki@yahoo.com
sankar.saptharishi@gmail.com
balaji_ammu@yahoo.com

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 275 ***

Monday, December 18, 2006

வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணி !

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், இந்தியா சற்று நேரம் முன்பு, வெற்றி பெற்று வரலாறு படைத்தது !!! தென்னாபிரிக்காவில் நடந்த டெஸ்ட போட்டிகளில் இந்தியாவுக்குக் கிடைத்த முதல் வெற்றி இது ! இதற்கு முன் நடைபெற்ற ஒரு நாள் பந்தயங்களில் இந்திய அணி சந்தித்த மோசமான தோல்விகளை வைத்துப் பார்க்கும்போது, இவ்வெற்றி ஒரு மகத்தான வெற்றி என்று நிச்சயம் கூற முடியும். அதுவும் ஓர் அணியாக விளையாடி, இந்த உன்னத வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் பங்களித்தனர் என்றால் அது மிகையில்லை.

இன்று சற்று உடல் நலக் குறைவால் அலுவலகம் செல்ல முடியாமல் போனது கூட நல்லது தான் :) டிவியில் இந்திய வெற்றியையும், இந்திய அணியினரின் வெற்றிக் கொண்டாட்டத்தையும் பார்த்து ரசிக்க முடிந்ததில் மகிழ்ச்சியே ! எப்போதாவது தானே இது போன்ற தருணங்கள் காணக் கிடைக்கிறது ;-)

இந்த வெற்றிக்கு அணி வீரர்கள் பலரும் காரணமாய் இருந்தனர். இந்தியாவின் முதல் இன்னிங்க்ஸில் சச்சின் 44 ரன்களும், கங்குலி 51 ரன்களும் எடுத்து, இந்தியா 249 ரன்கள் சேர்க்க உதவினர். VRV சிங்கும் இன்னிங்க்ஸின் இறுதியில் கங்குலிக்கு துணையாக நின்று 29 ரன்கள் எடுத்ததையும் இங்கு குறிப்பிட வேண்டும் !!!

தென்னாபிரிக்க அணி பேட் செய்தபோது, ஓர் இளஞ்சிங்கத்தை போல் பந்து வீசிய ஸ்ரீசாந்த் 5 விக்கெட்டுகளையும், அனுபவமிக்க ஜாகீரும், அனில் கும்ப்ளேயும் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி தென்னாபிரிக்க அணியை 84 ரன்களுக்கு சுருட்டினார்கள் ! சேவாக் மற்றும் லஷ்மண் ஆகியோர் தலா இரண்டு அருமையான காட்ச்களைப் பிடித்தனர்.

இந்தியாவின் 2-வது இன்னிங்க்ஸில் சேவாக் அதிரடியாக ஆடி 33 ரன்களும், கங்குலி 25 ரன்களும், லஷ்மண் நிதானமாக ஆடி 73 ரன்களும் எடுத்தனர். இன்னிங்க்ஸின் இறுதியில் ஜாகீர், லஷ்மணுக்குத் துணையாக நின்று ஆடி, 37 ரன்கள் எடுத்தது ஆட்டத்தின் சிறப்பு அம்சம் ! இந்தியா 236 ரன்கள் எடுத்து, தென்னாபிரிக்காவுக்கு 402 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.

தென்னாபிரிக்கா, இரண்டாவது இன்னிங்க்ஸில் 278 ரன்கள் மட்டுமே எடுத்து, 123 ரன்கள் வித்தியாசத்தில், நான்காவது நாள் உணவு இடைவேளை முன்பாகவே தோல்வியைத் தழுவியது ! ஸ்ரீசாந்த், ஜாகீர், கும்ப்ளே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அனில் கும்ப்ளே, போலக்கும், பிரின்ஸ¤ம் கூட்டு சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், அவ்விருவரையும், clean bowled செய்து தான் ஒரு மாஸ்டர் பந்து வீச்சாளர் என்பதை மறுபடி ஒரு முறை நிரூபித்தார் !! பிரின்ஸ் 97 ரன்கள் எடுத்து, சதத்தை நழுவ விட்டார். 2-வது இன்னிங்க்ஸிலும், சேவாக் இரண்டு நல்ல காட்ச்கள் பிடித்தார்.

இந்த அற்புதமான இந்திய வெற்றிக்கு, இளமையும், அனுபவமும் ஒரு சேர நின்று வழி வகுத்தன என்று சந்தோஷமாகக் கூறலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 271 ***

Sunday, December 17, 2006

குழந்தை ஸ்வேதா நலம்

அன்புக்குரிய நண்பர் சிங்கை அன்பு அவர்கள் குழந்தை ஸ்வேதாவின் மருத்துவ உதவிக்கான முயற்சியை, எனது பதிவில் வெளியிட்ட ஒரு வேண்டுகோள் வாயிலாகத் தொடங்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக வலையுலக நண்பர்கள், தகவல்கள் அளித்தும், பொருளுதவி செய்தும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஸ்வேதாவின் இதய அறுவை சிகிச்சை ஒரு வாரம் முன்பு நல்லபடி நடந்து முடிந்தது. ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த ஸ்வேதா, தற்போது வீட்டுக்கு வந்து விட்டாள். அறுவை சிகிச்சை நடந்த இடத்தில் அவ்வப்போது சற்று வலியிருந்தாலும், குழந்தை ஸ்வேதா நலமாகவே இருக்கிறாள். ஒரிரு மாதத்தில் பூரண குணம் அடைந்து விடுவார் என்று டாக்டர் கூறியுள்ளார்.

நேற்று மருத்துவமனை சென்று குழந்தையைப் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன், அதற்குள் ஸ்வேதா டிஸ்சார்ஜ் ஆகி, வீட்டுக்குச் சென்று விட்டாள். எனது உடல் நலமும் சற்று சரியில்லாத நிலையில், ஒரு 2-3 நாட்கள் கழித்து, ஸ்வேதாவை அவளது வீட்டிற்கே சென்று பார்க்கலாம் என்றிருக்கிறேன். இந்த நேரத்தில், உதவிய நண்பர்களுக்கும், ஸ்வேதா குணமடைய வாழ்த்திய / பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 270 ***

Sunday, December 10, 2006

சாந்தி - வெள்ளி வென்ற தங்க மங்கை

தோஹாவில் நடைபெறும் ஆசியாத் விளையாட்டுக்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி சவுந்தராஜன் என்ற 24 வயது வீராங்கனை, 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இரண்டாம் இடம் பெற்று (2:03:16) வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர் பதக்கப் பட்டியலில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ! மூன்றாவது இடத்தைப் பிடித்த கழகஸ்தானைச் சேர்ந்த விக்டோரியாவை 3/100 வினாடிகள் வித்தியாசத்தில் பின்னுக்குத் தள்ளினார்.
Photobucket - Video and Image Hosting
அவரது ஓட்டத்தை டிவியில் பார்த்தேன், நிஜமாகவே கடைசி 100 மீட்டர் அபாரமாக, புயல் போல ஒடி, அனுபவமிக்க பலரை பின்னுக்குத் தள்ளி, இந்த சாதனையைப் புரிந்தார் !!! பார்வையாளர்கள் கூட்டத்தில் இருந்த பெருவாரியான இந்தியர்கள் தன்னை உற்சாகப்படுத்தியது, பதக்கம் பெற வேண்டும் என்ற தனது உத்வேகத்தை அதிகப்படுத்தியது என்று சாந்தி கூறியிருக்கிறார். தனது பயிற்சியாளர் நாகராஜனையும் வெற்றிக்கு முக்கியக் காரணமாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு அரசு, சாந்தியின் இந்த மகத்தான சாதனையை பாராட்டி அவருக்கு 15 லட்ச ரூபாயை பரிசாக அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில், ஓர் ஏழைக் குடும்பத்தில் (மொத்தம் ஏழு பேர்) பிறந்த சாந்தி, முதலில் ஓடத் தொடங்கியதே தனது குடும்பத்தின் வருமானத்தைப் பெருக்கத் தான். ஏனெனில், அவரது (கூலி வேலை பார்க்கும்) தாயாரின் சொற்ப வருமானத்தில் சாந்தியின் குடும்பம் வறுமையின் கொடுமையில் வாடியது. இதய நோயில் வாடும் அவரது தந்தை, வேலைக்குச் செல்ல முடியாத சூழல் !

சென்ற வருடம், பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த மராத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு, மூன்றாவது இடம் பெற்றதில், சாந்திக்கு ரூ.25000 கிடைத்தது. அதைக் கொண்டு அவரது நான்கு தம்பி தங்கைகளின் கல்விச் செலவை சமாளித்தார். பின்னர், பெடரேஷன் கோப்பை 800 மீ ஓட்டத்தில், முதலிடம் வந்து தங்கம் வென்றார். அதன் பின்னர், செப்டம்பர் 2005-இல் நடந்த ஆசிய தடகளப் போட்டிகளில், 800 மீ ஓட்டத்தில், வெள்ளிப் பதக்கம் வென்றார். மிகுந்த குடும்ப கஷ்டங்களுக்கிடையில், அயரா முயற்சியோடு, படிப்படியாக முன்னுக்கு வந்த சாந்தியை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

ஒரு தடகள வீராங்கனைக்கு, சரியான சத்துணவு மிக அவசியமானது. ஆனால், அவரது குடும்பமே அவரை நம்பியிருக்கும் சூழலில், சாந்தி பல நேரங்களில் பட்டினி கிடந்திருக்கிறார். தற்போது மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் சாந்தி, தனது ஓட்டப்பந்தய வெற்றிகள் தனக்கு ஒரு நல்ல வேலையைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையோடு உள்ளார்.

என்றென்றும் அன்புடன்
பாலா

*** 269 ***

Friday, December 08, 2006

Warning ! Hazardous Material

இதைப் பிரசுரிப்பதால், பெண்ணியவாதிகள் என்னை கண்ணியமற்றவன் என்று எண்ண வேண்டாம் !!! Please take it in good humour and please do not come knocking at my door, with brick bats :))) வேண்டுமானால், இந்த 'data sheet'-ஐ எழுதியவரைக் கண்டுபிடித்து உங்கள் முன் ஆஜர்படுத்த ஆவன செய்கிறேன் !

Photobucket - Video and Image Hosting

எ.அ.பாலா

### 268 ###

Wednesday, December 06, 2006

சிந்திக்க மறுக்கும் சிந்தனாவியாதிகள்

கி.அ.அ. (கிராமத்து அரட்டை அரசியல்) அனானி ஒரு மேட்டரை மெயிலில் அனுப்பி, இவ்வாறு எழுதியிருந்தார்:
**************************
எ.அ.பாலா,
கொஞ்ச நாளா ஊர்ல இல்லை. வலைப்பதிவு பக்கமும் வர முடியவில்லை. இன்று வாசித்த ஒரு பதிவுக்கு பின்னூட்டம் இட (அட ...அனானியாத் தான்) எண்ணி எழுதியது நீண்டு விட்டதால், தங்களுக்கு அனுப்புகிறேன். பதிவாக இடுவீர்கள் என்று நம்புகிறேன். யோசித்துப் பார்த்தால் குறிப்பிட்ட அப்பதிவில் பின்னூட்டுவதை விட (ஜால்ரா காதைப் பிளப்பதால்) தாங்கள் பதிவாக பிரசுரித்தால் பெட்டர் என நினைக்கிறேன். அப்புறம் உங்கள் இஷ்டம்.
கி.அ.அ.அனானி

பி.கு: எந்தப் பதிவை குறிப்பிடுகிறேன் என்று கண்டுபிடிப்பவர்களுக்கு டிசம்பர் மாதக் கச்சேரிகளுக்கு பாலா இலவச டிக்கெட் வழங்குவார் ;-)

***************************
'இதில் என்ன இருக்கிறது' என்பதாலும், "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பரந்த நோக்கிலும் கி.அ.அ.அனானியின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன் :)
இப்பதிவுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு கி.அ.அ.அ. அவர்களையே பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன் !!! கி.அ.அ.அ மேட்டர் பதிவாக கீழே !
எ.அ.பாலா
**********************

"எங்கள் வீட்டில் தேங்காய் குழம்பு" இப்படி சொன்னவளிடம் எதிர் வீட்டுக்காரி " எங்கள் வீட்டில்
யாருக்குமே தேங்காய் ஆகாது..நாங்கள் தேங்காயே வாங்குவதில்லை " சொல்லும் போதே மனதுக்குள்
தேங்காயை துறுவு துறுவென்று துறுவி தேங்காய் வாங்க வக்கில்லாத அகங்காரத்தை சேர்த்து மனதுக்குள் போட்டு மென்று அரைத்த படி கடவாயில் தேங்காய் நினைப்பின் எச்சில் ஊற சொல்வாளாம். அடுத்த
வீட்டுக்காரியின் பொறாமை பற்றி இந்த மாதிரியாக வர்ணித்திருப்பார் ஒரு எழுத்தாளர்...தமிழ்
கதையில்தான்...இப்படி இருக்கிறது ஒரு வலைப்பதிவரின் ஆதங்கம்....

விஷயம் ஒன்றுமில்லை....டிசம்பர் கச்சேரிகளில் தமிழில் பாடுவதில்லையாம்...பாடும் ஒரு
குறிப்பிட்ட சாதி பொண்கள்...!!!!????

இந்த மாதிரி அதிகம் (வெட்டி) உணர்ச்சி வசப்படுபவர்களுக்கு சில யோசனைகள்

முதலாவதாக இந்த சாதிக்காரர்கள் மட்டும் ஏன் பாட வேண்டும்...விருப்பமுள்ளவர் அனைவரும் தமிழில் பாடி தமிழ் வளர்க்கலாம்...

இரண்டாவதாக இப்படி தமிழல்லாத குறிப்பிட்ட மொழியில் பாடி ( தமிழ் வளர்க்காத ) கச்சேரிகளை புறக்கணிக்கலாம்

மூன்றாவதாக தமிழில் பாடுபவர்களை ஊக்குவிக்க ஏதாவது உபயோகமாக செய்யலாம்..

நாங்காவதாக எனக்கு பறை, தமுக்கு அடிக்கத் தெரியும் என்று பீற்றுவதை விட்டு விட்டு அரங்கேற்றம் செய்து தமிழ் பாரம்பரிய கலைகளை மக்களிடம் எடுத்து செல்லலாம்.

ஐந்தாவதாக தமிழில் மட்டுமே பாடி கச்சேரி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசை மானியம் வழங்கச் சொல்லி பரிந்துரையாவது செய்யலாம்.

இதெல்லாம் விட்டுவிட்டு எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினரையும் இழிவாக பேசி கூப்பாடு போடுவதாலெல்லாம் வலையுலகில் அரிப்பெடுத்து அலையும் சிலருக்கு சுகமாய் சொரிந்து விட உதவலாம்...ஆனால் இதனாலெல்லாம் தமிழ் வளர்ந்து விடாது...அரிப்பை சொரியும் போது சுகமாய் இருக்கும்...ஆனால் சொரிந்து சொரிந்து புண்ணாகுமே தவிர சொரிவது அரிப்புக்கு மருந்தாகுமா????

இவர்களே சொல்வது போல பட்டுப் புடவை சரசரக்க , போண்டா தின்பதற்காகவே ஒரு சில மாமிகள் மட்டுமே போய் புரியாமல் கேட்கும் சங்கீதத்தின் மேல் இவர்களுக்கு ஏன் இத்தனை ஆற்றாமை???அங்கலாய்ப்பு???? இப்படி சிலர் பாடுவதும் கேட்பதும் எந்தவிதத்தில் தமிழ் வளராமல் தடுத்துவிட்டது....இத்தனைக்கும் பாடுபவர்கள்... அனைவரும் வாரீர்...ஆதரவு தாரீர் என்றெல்லாம் இவர்களைப் போய் கேட்டதாகக் கூட தெரியவில்லை...அப்படிக் கேட்டாலும் தமிழில் பாடாதவர்களுக்கு ஆதரவில்லை என தெள்ளத்தெளிவாக சொல்லி விடலாம்.இதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதும் புத்தகங்களையும் புறக்கணித்து விடுங்கள்..அவர்களும் இதனால் சந்தாதாரர்கள் குறைந்தால் அதன் மூலம் பாடம் கற்று இந்த உதவாக்கரை கச்சேரிகளைப் பற்றி எழுதுவதை விட்டு விடுவார்கள்.

எனவே ஜென்டில்மேன்...மனதுக்குள் தேங்காய் தின்று கொண்டு..... தேங்காய் தின்னும் அடுத்தவனை பார்த்து கறுவுவதை விட்டு விட்டு..உண்மையில் தேங்காய் வாங்கித் தின்ன முயலுங்கள்....இதாவது தேவலை...இவர்களுக்கு பின்னூட்ட ஜால்ரா தட்டுபவர்களின் நிலைமை இன்னும் பரிதாபம்....தேங்காய் என்றால் என்ன என்று கூட தெரியாது...ஆனால் இவர்களுக்கு தேங்காய் பிடிக்காது.....கொடுமையடா சாமி????????

இந்த வலைப்பதிவரின் நேர்மைக்கும் மேதமைக்கும் சில உதாரணங்கள்...பின்னூட்டத்தில் சங்கீதம் பற்றி தமிழ் பற்றி உண்மை அக்கறையுடன் பேசிய எவருக்கும் இவர் பதில் சொல்லியிருக்க மாட்டார்....சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும் என்வது (தமிழ்) பழமொழி....அதைத்தவிர மற்ற அனைவருக்கும் வளைத்து வளைத்து பதில் பின்னூட்டம் கொடுத்திருப்பார்....

தலைப்பை மாற்றி வைத்தெல்லாம் நேர்மை பறை சாற்ற முடியாது....குறிப்பிட்ட ஜாதியத்தை திட்டுகிறேன் என்று குறிப்பிட்ட ஜாதியை திட்டும் மொள்ளமாரித்தனத்தை இதனாலெல்லாம் மூடி மறைக்கமுடியாது....Keep the title of your post as you wish...and blame and curse as much as you can.....This is a Free world, after all.

கி.அ.அ.அனானி
*************************

*** 267 ***

Monday, December 04, 2006

பெரிய திருமொழிப் பாசுரங்கள் தொகுப்பு - PTM1

திருமங்கை மன்னன் - திருவல்லிக்கேணி
Photobucket - Video and Image Hosting

949@..
ஆவியே. அமுதே. எனநினைந்துருகி* அவரவர் பணைமுலைதுணையா*
பாவியேன் உணராது எத்தனைபகலும்* பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்*
தூவிசேரன்னம் துணையொடும்புணரும்* சூழ்புனல் குடந்தையே தொழுது*
என் நாவினாலுய்ய நான் கண்டுகொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.2


பாவியான யான், "ஆவியே, அமுதே" என்றெல்லாம் பிதற்றிய வண்ணம், சகலவிதமான சிற்றின்ப எண்ணங்களுடன் பெண்டிர் பின் அலைந்து, நாட்களை வீணாக்கி, அறிவின்மையால் என் வாழ்வைத் தொலைத்தேன் ! அப்படிப்பட்ட நான், தன் துணையோடு மட்டுமே சேரும் அன்னங்கள் வாழும் வற்றாத நீர்ச்சுனைகள் மிக்க திருக்குடந்தைப் பெருமானை அடைந்து, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !

இப்பாசுரத்தில் "தூவிசேரன்னம் துணையொடும்புணரும்" என்று ஆழ்வார் பாடும்போது, பெருமாளை விட்டு என்றும் பிரியாமல் அவர் நெஞ்சில் குடியிருக்கும் பிராட்டியின் தன்மையைக் குறிப்பிடுவதாக பெரியோர் கூறுவர்.
********************************

953@..
எம்பிரான் எந்தை என்னுடைச்சுற்றம்* எனக்கரசு என்னுடைவாணாள்*
அம்பினால் அரக்கர் வெருக்கொளநெருக்கி* அவருயிர்செகுத்த எம்அண்ணல்*
வம்புலாம்சோலைமாமதிள்* தஞ்சை மாமணிக்கோயிலேவணங்கி*
நம்பிகாள். உய்யநான் கண்டு கொண்டேன்* நாராயணா என்னும் நாமம். (2) 1.1.6


ஆழ்வார், பக்திப் பேருவகையில், பெருமான் மேல் கொண்ட பேரன்பில் அருளிய இப்பாசுரத்திற்கு, அந்த உணர்வுகள் நீர்த்துப் போகாத வண்ணம் பொருள் கூறுவது சிரமமே ! முயற்சிக்கிறேன் !

என்னுடைய பெருமான், என்னுடைய தந்தை, என் உறவினன், என்னை ஆள்பவன், என் உயிரானவன், எல்லா நேரங்களிலும், எல்லா வகையிலும் என்னை ரட்சிப்பவன், அம்பால் அசுரர்களை மாய்த்த என் கிலேச நாசன் என்றெல்லாம் சதா சர்வ காலமும் அவ்வண்ணலையே சிந்தையில் நிறுத்தியிருக்கும் கற்றறிந்த அடியார்களே ! அழகிய சோலைகளும், உயர்ந்த மதில்களும் சூழ்ந்த தஞ்சையின் மாமணிக்கோயிலில் எழுந்தருளியுள்ள அப்பெருமானைத் தொழுது, நாராயணா என்னும் திருநாமத்தைச் சொல்லி, உய்வு பெறும் வழியை, அவன் அருளால் கண்டு கொண்டேனே !
********************************

966@
ஓதியாயிரநாமங்கள் உணர்ந்தவர்க்கு* உறுதுயரடையாமல்*
ஏதமின்றி நின்றருளும் நம்பெருந்தகை* இருந்தநல் இமயத்து*
தாதுமல்கிய பிண்டிவிண்டு அலர்கின்ற* தழல்புரை எழில்நோக்கி*
பேதைவண்டுகள் எரியென வெருவரு* பிரிதிசென்றடை நெஞ்சே. 1.2.9


பரமபுருஷனான எம்பெருமான், அவனது ஆயிரம் நாமங்களை பொருள் உணர்ந்து ஓதிய அடியார்களின் (முற்பிறவியின்)பாவங்களை களைந்து, துன்பம் எதுவும் அவரை நெருங்காதபடி ரட்சித்து, அவ்வடியார்கள் தன்னை வந்தடைவதற்கு அருள் செய்யும் பேரருளாளன். தாதுக்கள் நிறைந்த, எழில் மிக்க, சிவந்த அசோக மலர்களை, தீப்பந்துகள் என்று பேதமையில் எண்ணி அஞ்சி விலகும் வண்டுகள் வாழும், இமயத்துச் சாரலில் அமைந்த, திருப்பிரிதியின் நாயகனான அப்பிரானை வணங்கி, அவனைப் பற்றிடு என் நெஞ்சமே !
********************************

978@..
ஏனமுனாகி இருநிலமிடந்து* அன்றிணையடி இமையவர்வணங்க*
தானவனாகம் தரணியில்புரளத்* தடஞ்சிலைகுனித்த என்தலைவன்*
தேனமர்சோலைக் கற்பகம்பயந்த* தெய்வநன் நறுமலர்க்கொணர்ந்து*
வானவர்வணங்கும் கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.1


ஒரு சமயம், வராஹ அவதாரமெடுத்து கடலின் ஆழத்தில் சிறை வைக்கப்பட்ட பூவுலகை மீட்டுக் காத்தவனும், பின் ஸ்ரீராமனாக அவதரித்து, வானவர்கள் எல்லாம் வணங்கிப் போற்றும் வண்ணம், பலம் வாய்ந்த இராவணனையும் அசுர வம்சத்தையும் வில் கொண்டு மாய்த்தவனும் ஆவான் என் தலைவன். அந்த ஒப்பிலாத பெருமானே கங்கைக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான். அப்புண்ணியத் தலத்தில், தேவலோகச் சோலைகளில் மலர்ந்து நறுமணம் வீசும், பூஜைக்கு உகந்த, அழகிய கற்பக மலர்களை வானவர்கள் பறித்து வந்து, அவன் திருவடியில் வைத்து வணங்குகின்றனர் !
*****************************

984@
வெந்திறல்களிறும் வேலைவாயமுதும்* விண்ணொடு விண்ணவர்க்கரசும்*
இந்திரற்கருளி எமக்குமீந்தருளும்* எந்தையெம்மடிகள் எம்பெருமான்*
அந்தரத்தமரர் அடியிணைவணங்க* ஆயிரமுகத்தினாலருளி*
மந்தரத்திழிந்த கங்கையின்கரைமேல்* வதரியாச்சிராமத்துள்ளானே. 1.4.7


ஐராவதம் என்ற வெண்யானையையும், பாற்கடலை கடைந்தபோது உண்டான அமுதத்தையும், தேவலோகத்தையும், அதை அரசாளும் உரிமையையும் இந்திரனுக்கு அருளிய எம்பெருமானே, வேண்டுவனவற்றை எமக்கு உகந்து வழங்கும் என் அப்பன் ஆனவன் ! ஆயிரம் முகங்கள் கொண்டு அடியார்களுக்கும் வானவர்க்கும் அருள் வழங்கும் அக்கருணை வள்ளலே, இமயத்துச் சாரலில் உள்ள மந்திரமலையிலிருந்து பெருக்கெடுத்து ஓடி வரும் கங்கை நதிக் கரையில் அமைந்த பத்ரிகாஷ்ரமத்தில் எழுந்தருளியிருக்கிறான் !
*****************************
என்றென்றும் அன்புடன்
பாலா

*** 266 ***

Saturday, December 02, 2006

திவ்ய தேசம் 7 - திருக்கூடலூர்

Photobucket - Video and Image Hosting
இவ்வைணவ திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில், தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. ஐயம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஆறு கிமீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு, ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்ற பெயர்களும் உண்டு.
...................மூலவர் தரிசனம்...................
Photobucket - Video and Image Hosting
கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் ஜகத்ரட்சகன் என்று அழைக்கப்படுகிறார். கையில் செங்கோல் ஏந்தி காட்சி தரும் உத்சவருக்கும் அதே திருநாமம் தான்! மூலவ மூர்த்தி சுயம்புவாகத் தோன்றியவர் என்பது விசேஷம். தாயாரின் திருநாமங்கள் பத்மாசினி மற்றும் புஷ்பவல்லி ஆகும்.
....................உத்சவ மூர்த்தி.................
Photobucket - Video and Image Hosting
தீர்த்தமும், விமானமும் முறையே சக்ர தீர்த்தம், சுத்தஸத்வ விமானம் என்று அறியப்படுகின்றன. இத்தலத்தின் தலவிருட்சம் பலா ஆகும். கோயிலுக்குள் இருக்கும் பலா மரத்தில் சுயம்புவாக திருச்சங்கின் வடிவம் உருவாகியிருப்பதைக் காணலாம்.
Photobucket - Video and Image Hosting
ஒரு முறை, நந்தக முனியும், தேவர்களும் இங்கு ஒன்று கூடி ஹிரண்யாக்ஷனின் கொடுமையிலிருந்து பூவுலகைக் காக்குமாறு, மகாவிஷ்ணுவை வணங்கித் தொழுத காரணத்தால், இந்த புண்ணியத் தலம் திருக்கூடலூர் என்ற பெயர் பெற்றது என்று தல புராணம் கூறுகிறது. அவர்களின் வேண்டுதலே, எம்பெருமான் வராஹ அவதாரம் எடுக்கக் காரணமானது !
....................நரஸிம்ம மூர்த்தி .....................
Photobucket - Video and Image Hosting
நந்தக முனிவரின் மகளான உஷய், தலப்பெருமாளுக்கு மலர்ச் சேவை செய்து வந்ததாகவும், அவள் மேல் மையல் கொண்ட சோழ மன்னன் ஒருவன் அவளை மணந்ததாகவும், அவனது அமைச்சர்களின் பொய்யான தகவல்களை நம்பி அவளை விட்டுப் பிரிந்ததாகவும், பின் பெருமாளே அவர்கள் மீண்டும் கூடி வாழக் காரணமாக இருந்ததாகவும், அதனாலேயே இத்தலம் 'கூடலூர்' என்ற பெயர் பெற்றதாகவும் மற்றொரு பழங்கதை சொல்கிறது.

................மணவாள மாமுனிகள்..............
Photobucket - Video and Image Hosting
காவிரி, இவ்விடத்தில் திருமாலை வணங்கி, பாப விமோசனம் பெற்று, இழந்த பொலிவை திரும்ப அடைந்ததாக ஓர் ஐதீகம் உண்டு. அம்பரீசன், திருமங்கையாழ்வார், பிரம்மன், கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகியோர் பெருமாளின் தரிசனம் பெற்று, அவரை வழிபட்ட புண்ணியத் தலமிது.
.......................சக்கரத்தாழ்வார்.................
Photobucket - Video and Image Hosting
இவ்வைணவ திருப்பதியை திருமங்கையாழ்வார், அவர் அருளிச் செய்த பெரிய திருமொழியில் உள்ள பத்து திருப்பாசுரங்களில் (1358-67) மங்களாசாசனம் செய்துள்ளார்.
**************************************
1358@..
தாம்* தம்பெருமையறியார்*
தூதுவேந்தர்க்காய* வேந்தர்ஊர்போல்*
காந்தள்விரல்* மென்கலை நன்மடவார்*
கூந்தல்கமழும்* கூடலூரே (5.2.1)
******************************
1359@
செறும்திண்* திமிலேறுடைய* பின்னை

பெறும்தண்கோலம்* பெற்றார்ஊர்ப்போல்*
நறுந்தன்தீம்* தேன்உண்டவண்டு*
குறிஞ்சிபாடும்* கூடலூரே (5.2.2)
********************************
1360@
பிள்ளைஉருவாய்த்* தயிருண்டு* அடியேன்

உள்ளம்புகுந்த * ஒருவரூர்போல்*
கள்ளநாரை* வயலுள்* கயல்மீன்

கொள்ளைகொள்ளும்* கூடலூரே (5.2.3)

என் அண்ணல், கோகுலத்து பாலகனாய், வாயிலிருந்து ஒழுக ஒழுக தயிரை உண்டு, என் உள்ளம் புகுந்த கள்வன் ! நாரைகள் வயல்களில் நின்றபடி காத்திருந்து, சூழ்ச்சியாக மீன்களை நீரிலிருந்து கவ்வியெடுக்கும் திருக்கூடலூரில் ஒப்பிலா அப்பிரானே எழுந்தருளியிருக்கிறான்.
********************************
1361@
கூற்றேருருவின்* குறளாய்* நிலம்நீர்

ஏற்றான்எந்தை* பெருமானூர்போல்*
சேற்றேருழுவர்* கோதைப் போதூண்*
கோல்தேன்முரலும்* கூடலூரே (5.2.4)


சிறிய வாமன வடிவினனாய் மாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, மூவுலகையும் இறைந்து பெற்றவன் என்னப்பன் ! குடியானவர் தங்கள் தலைப்பாகையில் சூடியுள்ள மலர்களின் தேனுண்டு, இனிமையாக ரீங்காரமிடும் வண்டுகள் நிறைந்த திருக்கூடலூரிலும் அப்பெருமானே தங்கி அருள் பாலிக்கிறான் !
********************************
1362@
தொண்டர்பரவச்* சுடர்சென்றணவ*
அண்டத்துஅமரும்* அடிகளூர்போல்*
வண்டலலையுள்* கெண்டைமிளிர*
கொண்டலதிரும்* கூடலூரே (5.2.5)


அண்டத்தை வியாபித்த பேருருவம் எடுத்த ஒளி மிக்க ஆதி பிரானை அடியார்கள் சூழ்ந்து போற்றி வணங்குகின்றனர் ! அவ்வண்ணலே, சூரிய ஒளி பட்டு மின்னும் மீன்கள், நீரின் மேற்பரப்பு அதிர,துள்ளி விளையாடும் சுனைகள் நிறைந்த திருக்கூடலூரில் கோயில் கொண்டுள்ளான்.
******************************
1363@
தக்கன்வேள்வி* தகர்த்ததலைவன்*
துக்கம் துடைத்த* துணைவரூர்போல்*
எக்கலிடு* ஞுண்மணல்மேல்* எங்கும்

கொக்கின் பழம்வீழ்* கூடலூரே (5.2.6)
**********************************
1364@
கருந்தண் கடலும்* மலையும் உலகும்*
அருந்தும் அடிகள்* அமரும்ஊர்போல்*
பெருந்தண் முல்லைப்* பிள்ளையோடி*
குருந்தம் தழுவும்* கூடலூரே (5.2.7)


கரிய, குளிர்ந்த கடல்களையும், மலைகளையும், உலகங்களையும், பிரளயத்தின் போது காக்க வேண்டி உண்ட பரந்தாமன், முல்லைக் கொடி வளர்ந்து பரவி, குருந்த மரங்களை தழுவி மறைத்து விடும் வனப்புடைய திருக்கூடலூரில், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறான்.
*******************************
1365@
கலைவாழ்* பிணையோடு அணையும்* திருநீர்

மலைவாழ் எந்தை* மருவும்ஊர்போல்*
இலைதாழ் தெங்கின்* மேல்நின்று* இளநீர்க்

குலைதாழ்கிடங்கின்* கூடலூரே (5.2.8)
************************************
1366@
பெருகு காதல் அடியேன்* உள்ளம்-
உருகப் புகுந்த* ஒருவரூர்போல்*
அருகுகைதைமலர* கெண்டை

குருகென்றஞ்சும்* கூடலூரே (5.2.9)

என் ஐயனை அடைய வேண்டும் என்கிற பேரவா நாளுக்கு நாள் பெருக, என் உள்ளமானது சதா சர்வ காலமும் அவன் ஒருவனையே எண்ணி உருகுகிறது ! கரைக்கு அருகில் வளர்ந்திருக்கும் தாழை மலர்களை, தம்மைக் கொத்த வந்த நாரைகள் என்றெண்ணி அஞ்சும் மீன்கள் வாழும் தடாகங்கள் நிறைந்த திருக்கூடலூரில், கருணை மிக்க அவ்வண்ணல் எழுந்தருளி உள்ளான்.
********************************
1367@..
காவிப் பெருநீர் வண்ணன்* கண்ணன்

மேவித்திகழும்* கூடலூர்மேல்*
கோவைத் தமிழால்* கலியன் சொன்ன*
பாவைப் பாடப்* பாவம் போமே (5.2.10)
******************************************
...............ஊர்த்வ புண்ட்ரம்..................
Photobucket - Video and Image Hosting
ஒரு சமயம், கொள்ளிடம் நதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், இத்திருக்கோயில் மூழ்கி, விக்ரகங்கள் அடித்துச் செல்லப்பட்டதாகவும், வெள்ளத்தில் மூழ்கிய விக்ரகங்கள் அருகில் உள்ள கீழ் வளத்தூர் என்ற ஊரைச் சேர்ந்த தீக்ஷிதர் ஒருவரின் கனவில் பார்த்த இடத்தில் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அவ்வூரிலேயே 1741ல் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் தெரிய வருகிறது. தற்போது நாம் காணும் (பாபனாசத்துக்கு அருகே பெருமாள் கோயில் என்ற கிராமத்தில் உள்ள) கோயிலை, ராணி மங்கம்மாள் கட்டியதாக (அல்லது புதுப்பித்ததாக) தெரிய வருகிறது.
Photobucket - Video and Image Hosting
கோயிலில், வரதராஜப் பெருமாள், ஆண்டாள் மற்றும் ஆழ்வார்களுக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன. கோயிலுக்கு முன்னே உள்ள அழகான ராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. கோயிலுக்கு உள்ளே இருக்கும் ஒரு மண்டபத்து தூண்களில் ராணி மங்கம்மா மற்றும் அவரது அமைச்சர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். நாலு கால பூஜை மரபு. வருடாந்திர பிரம்மோத்சவம் வைகாசித் திங்களில் விமரிசையாக நடைபெறுகிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

புகைப்படங்கள் உதவி: ராமானுஜ தாஸர்கள் வலைத்தளம்

*** 265 ***

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails